பருவநிலை மாறுபாடு மீதான ஐ.நா. கட்டமைப்பு உடன்படிக்கையின் (UNFCCC – United Nations Framework Convention on Climate Change) உறுப்பு நாடுகளின் பருவநிலை மாறுபாட்டுக்கான 23 வது மாநாடு [COP 23 – Conference of Parties 23] அண்மையில் ஜெர்மனியில் உள்ள பான் (Bonn) நகரில் நடைபெற்றது.
பிஜி (Fiji) நாடு இந்த மாநாட்டிற்குத் தலைமை தாங்கியது.
இந்த மாநாட்டின் முடிவில் உறுப்பு நாடுகள் “தலாநோவா பேச்சுவார்த்தை” (Talanoa dialogue) – க்கான திட்ட வரைவை ஏற்படுத்தியுள்ளன.
தலாநோவா பேச்சுவார்த்தையானது பருவநிலை மாற்றத்தை தடுப்பதற்கான உறுப்பு நாடுகளின் தணிப்பு நடவடிக்கைகளை மதிப்பிடும் ஓராண்டு கால செயல்முறையாகும்.
மேலும் இம்மாநாட்டில் 2015-ல் மேற்கொள்ளப்பட்ட “பாரிஸ் பருவநிலை மாற்றத்திற்கான ஒப்பந்தத்தை” அமல்படுத்துவதற்குத் தேவையான விதிகள் வகுக்கப்பட்டதோடு, வளர்ந்த பணக்கார நாடுகள் அவை ஏற்றுக்கொண்ட 2020-க்கு முன்னதான பருவநிலை மாற்றத் தணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டிட ஏற்ற கடமைகளை நிறைவேற்றுவதற்கான உறுதிகளும் இயற்றப்பட்டன.
தலாநோவா என்பது பிறரின் மீது குறையைச் சாடாமல் நாடுகளுக்கிடையேயான வேற்றுமைகளை அனைவரும் பங்கேற்கும், உள்ளடங்கிய, வெளிப்படையான பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காண பிஜி மற்றும் பசுபிக் தீவுகளில் பயன்படுத்தப்படும் பாரம்பரிய தீர்வை அணுகுமுறையாகும்.