வன விலங்குகள் மற்றும் தாவரங்களின் அருகி வரும் இனங்கள் மீதான சர்வதேச வர்த்தக உடன்படிக்கைக்கான (CITES – Convention on International Trade in Endangered species of with Fauna and Flora) அமைப்பானது வனஉயிரிகளின் சட்ட விரோத வர்த்தகத்தை தடுப்பதில் இந்தியா மேற்கொண்ட முயற்சிகளை பாராட்டும் வகையில் இந்தியாவிற்கு பாராட்டு சான்றிதழை (Certificate of Commendation) வழங்கியுள்ளது.
“ஆப்ரேஷன் சேவ் குர்மா“ என (Operation Save Kurma) குறியீட்டு பெயருடைய குறிப்பிட்ட வன உயிர் இனத்திற்கான பாதுகாப்பு செயற் நடவடிக்கையை ஒருங்கிணைத்து மேற்கொண்டமைக்காக வனஉயிர்கள் மீதான குற்றங்கள் தடுப்பு அமைப்பிற்கு (Wildlife Crime Control Bureau - WCCB) இச்சான்று அளிக்கப்பட்டுள்ளது.
WCCB-ன் வனஉயிர்களின் சட்டவிரோத வர்த்தகத்தை தடுப்பதற்கான உலகளாவிய மற்றும் பிராந்திய அளவிலான முன்மாதிரி செயற் நடவடிக்கைகளை அங்கீகரித்து இந்த பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
அண்மையில் ஜெனிவாவில் நடைபெற்ற CITESன் 69வது நிலைக் குழு மாநாட்டில் இப்பாராட்டு சான்றிதழை உலக அளவில் இந்தியா மட்டுமே பெற்றுள்ளது.
ஆப்ரேஷன் சேவ் குர்மா
வெளிநாடுகளுக்கு இந்தியாவிலிருந்து உயிருள்ள ஆமைகள் மற்றும் அவற்றின் உறுப்புகள் சட்ட விரோதமாக வர்த்தகம் செய்யப்படுவதை தடுப்பதற்காக “ஆப்ரேஷன் சேவ் குர்மா“ மேற்கொள்ளப்பட்டது.
WCCB
வனவிலங்குகள் பாதுகாப்புச் சட்டம் 1972 –ல் (Wildlife Protection Act-1972) 2007 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தின் கீழ் உருவாக்கப்பட்ட ஓர் சட்ட அமைப்பே WCCB ஆகும்.
நாட்டிலுள்ள வனவிலங்குகள் தொடர்புடைய குற்றங்களை தடுப்பதற்காக இது ஏற்படுத்தப்பட்டது.