பாலி தீர்மானம் - 2017: இந்தியா கையெழுத்திட மறுப்பு
September 8 , 2017 2669 days 911 0
உலக பாராளுமன்ற கூட்டத்தின் நீடித்த மேம்பாட்டிற்கான கூட்டம் இந்தோனேஷியாவின் நுஸாடுவாவில் செப்டம்பர் 6 மற்றும் 7 தேதிகளில் நடத்தப்பட்டது. இது 2030ல் அடையவிருக்கும் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கான இலக்குகளைப் பற்றி விவாதித்தது. இறுதியாக இதில் எட்டப்பட்ட முடிவுகள் பாலி தீர்மானம் - 2017 என ஏற்றுக் கொள்ளப்பட்டன. மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தலைமையிலான இந்திய பாராளுமன்ற பிரதிநிதிகள் குழு இக்கூட்டத்தில் பங்கேற்றது.
இதன் இறுதியில் எட்டப்பட்ட பாலி தீர்மானத்தில், மியான்மரின் ரகைன் மாநிலத்திலிருந்து வங்கதேசத்திற்கு துரத்தப்பட்ட 1,25,000 ரோஹிங்யாக்களைப் பற்றிய சம்பவம் வன்முறை நிகழ்வாக குறிப்பிடப்பட்டது. இதனால் இந்தியா இப்பாலி தீர்மானத்தில் கையெழுத்திடாமல் ஒதுங்கிக் கொண்டது.
தனிப்பட்ட ஒரு நாட்டை இக்கூட்டத்தில் குறிப்பிடுவது நியாயமற்றது என்றும், இக்கூட்டமானது நீடித்த வளர்ச்சி இலக்குகள் மற்றும் ஒருங்கிணைந்த அல்லது உள்ளடங்கிய வளர்ச்சிக்கானது என்றும் இதற்காக அனைத்து நாடுகளின் ஒத்துழைப்பும் கூட்டுமுயற்சியும் 2030ம் ஆண்டிற்கான இலக்கை அடைய தேவை என்றும் இந்தியா வாதிட்டது.