தமிழ்நாடு வனத்துறையானது கடலூர் மாவட்டத்தில் உயிரி சார்ந்தக் கேடயங்களை உருவாக்கச் செய்வதன் மூலம் கரையோர வாழ்விடங்களை உருவாக்குவதற்கும், மோசமடைந்த நிலையிலான சதுப்பு நிலங்களை மீளுருவாக்குவதற்குமான விரிவான திட்டத்தினை வகுத்துள்ளது.
2023-24 ஆம் ஆண்டில் பிச்சாவரத்தில் சதுப்பு நிலப் பரப்பை 100 ஹெக்டேர் அளவு வரை வனத் துறை அதிகரிக்கவுள்ளது.
பிச்சாவரம் சதுப்புநிலங்கள் மாநிலத்தில் உள்ள அதிக ஆக்க வளம் கொண்ட சுற்றுச் சூழல் அமைப்புகளில் ஒன்றாகவும், பல்லுயிர்ப்பெருக்கங்களின் மீதான ஒரு முக்கியக் களஞ்சியமாகவும் உள்ளது.
இந்தப் பகுதியில் சுமார் 840 வகையான தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் காணப் படுகின்றன.
இவற்றில் 115 வகையான பறவைகள், 16 வகையான பாலூட்டிகள், 11 இருவாழ்விகள், 177 வகையான துடுப்புடைய மீன் இனங்கள், 95 வகையான மிதவை விலங்கின நுண்ணுயிரிகள் (ஜூப்ளாங்க்டன்), 82 மிதவைத் தாவர நுண்ணுயிரிகள் (பைட்டோ பிளாங்க்டன்), 35 வகையான வண்ணத்துப் பூச்சிகள், 17 வகை பாம்புகள் மற்றும் 3 வகையான கடல் புல் இனங்கள் ஆகியவை அடங்கும்.
தமிழ்நாட்டில் உள்ள சதுப்புநிலங்களின் பரவல் 44.94 சதுர கிலோமீட்டர் (ச.கி.மீ) ஆக உள்ள நிலையில், இதில் சுமார் 7.73 சதுர கிலோமீட்டர் வரையிலான சதுப்பு நிலங்கள் கடலூரில் அமைந்து உள்ளது.
பிச்சாவரத்தின் 21% பகுதியானது நீர்நிலைகளும், 27% பகுதியானது வளமான சதுப்பு நிலத் தாவரங்களும், 38% பகுதியானது ஆங்காங்கே வளர்ந்து செழித்துக் காணப்படும் சதுப்பு நிலங்களும் பரவிக் காணப் படுகின்றன.