பிரபல வரலாற்று அறிஞரும் மத்திய கால வரலாற்றை பற்றி தெளிவாக எழுதியவருமான சதீஷ் சந்திரா சமீபத்தில் தனது 95 வயதில் காலமானார். மத்திய அரசின் பாட நூல் கழகமான NCERT மத்திய கால வரலாற்று புத்தகத்தை 1970களில் முதன் முறையாக எழுதினார். இந்த புத்தகங்கள் 2000ம் ஆண்டு வரை புழக்கத்தில் இருந்தன.
இவர் மத்திய கால இந்தியாவைப் பற்றி எழுதும்போது இந்தியாவின் ஒட்டுமொத்த கலாச்சாரத்தையும் மத சார்பற்ற வகையில் ஏராளமான தகவல்களுடன் விவரித்துள்ளார்.
1973 முதல் 76 வரை பல்கலைக் கழக மானியக்குழுவின் துணைத் தலைவராகவும் 76 முதல் 81 ம் ஆண்டு வரை அதன் தலைவராகவும் பதவி வகித்துள்ளார். இவர் டெல்லியிலுள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக பேராசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.
அதற்கு முன்பு அலகாபாத் பல்கலைக்கழகம், அலிஹார் முஸ்லீம் பல்கலைக்கழகம், டெல்லி மற்றும் ராஜஸ்தான் பல்கலைக்கழகங்களில் இவர் பணி புரிந்துள்ளார். இவர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் 1971ல் கௌரவ விரிவுரையாளராக பணியாற்றினார்.
இவர் திரு. S. போகால், பிபின் சந்திரா, திருமதி. ரோமிலா தாபர் ஆகியோருடன் இணைந்து ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் சமூக அறிவியல் துறையில் வரலாற்று துறைக்கான சிறப்பு மையத்தை துவங்கினார்.