மராத்தா ஆட்சியாளரான பாஜி ராவ் பேஷ்வா II என்பவருக்கும், உள்ளூர் மஹர் (Mahar) சமூகத்தவரோடு கூட்டிணைப்பை கொண்ட ஆங்கிலக் கிழக்கிந்திய கம்பெனிக்கும் கி.பி 1818 ஆம் ஜனவரி மாதம் நடைபெற்ற மூன்றாம் ஆங்கிலேய -மராத்தா போரின் (War) ஒரு யுத்தமே (Battle) பீமா-கோரேகான் யுத்தமாகும்.
போரில் ஆங்கிலேயர்கள் பெற்ற வெற்றியானது மராத்திய பேஷ்வாக்களின் ஆதிக்கத்தின் முடிவுக்கு இட்டுச் சென்றது.
வரலாற்று ரீதியாக மஹர் சமூகத்தவர் தீண்டத்தகாதவர்களாக (Untouchables) நடத்தப்பட்டு வந்தனர்.
இருப்பினும் 17 ஆம் நூற்றாண்டில் மராத்திய சாம்ராஜ்ஜியத்தின் பேரரசர் சத்ரபதி சிவாஜி, அதிக எண்ணிக்கையில் மஹர் சமூகத்தவர் பலரை தன் மராத்திய படைகளில் பணியமர்த்தினார்.
எனினும் பிந்தைய காலங்களில், இரண்டாம் பாஜி ராவ் மஹர் சமூகத்தவர் மராத்திய ராணுவத்தில் பணிபுரிய நிராகரித்து அதன் மூலம் அவர்களை அவமானப்படுத்தியதைத் தொடர்ந்து, மஹர் சமூகத்தவருக்கும் பேஷ்வாக்களுக்கும் இடையிலான உறவில் பிளவு உண்டானது.
இதனால் அவர்கள் பேஷ்வாக்களுக்கு எதிராக ஆங்கிலேயர்களுடன் இணைந்தனர்.
மூன்றாம் ஆங்கிலேய -மராத்தா போரின் வெற்றியைத் தொடர்ந்து, அதன் நினைவாக ஓர் நினைவு வெற்றித் தூணை (Koregaon Ranstambh) 1818-ல் பீமா-கோரேகான் எனும் பகுதியில் ஆங்கிலேயர்கள் அமைத்தனர்.
இவ்வருடம், இந்த யுத்தத்தின் 200-ஆவது ஆண்டு நினைவு கடைபிடிக்கப்பட்ட போது, மகாராஷ்டிராவில் இருபிரிவினிற்கிடையே வன்முறை வெடித்தது.