சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் ஆனது 2024 ஆம் ஆண்டு ஜூன் 01 ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ள புதிய ஓட்டுநர் உரிம விதிகளை அறிவித்துள்ளது.
இது ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான செயல்முறையை எளிதாக்கும் நோக்கில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் கொண்டுவருகிறது.
மிகவும் குறிப்பிடத்தக்க மாற்றங்களில் ஒன்றாக, விண்ணப்பதாரர்கள் இனி பிராந்திய போக்குவரத்து அலுவலகத்தில் ஓட்டுநருக்கான சோதனைக்கு உட்பட வேண்டியது இல்லை.
அதற்குப் பதிலாக அங்கீகாரம் பெற்ற தனியார் ஓட்டுநர் பள்ளிகளில் ஓட்டுநர் தேர்வு நடத்தப்படலாம்.
விண்ணப்பதாரர் இந்தப் பள்ளிகளில் மேற்கொள்ளப்படும் ஓட்டுநர் தேர்வில் தேர்ச்சி பெற்றால், அவர்களுக்குச் சான்றிதழ் வழங்கப்படும்.
அந்தச் சான்றிதழை பிராந்திய போக்குவரத்து அலுவலகத்தில் அளித்து மேற்கொண்டு எந்த சோதனையும் இல்லாமல் ஓட்டுநர் உரிமத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
இருப்பினும், அங்கீகாரம் பெற்ற பள்ளியின் சான்றிதழ் இல்லாத பட்சத்தில், விண்ணப்பதாரர் பிராந்தியப் போக்குவரத்து அலுவலகத்தில் ஓட்டுநர் தேர்வில் பங்கேற்க வேண்டும்.
செல்லுபடியாகும் உரிமம் இல்லாமல் மகிழுந்து ஓட்டினால் 2,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்.