தற்பொழுது வெளிநாடு வாழ் இந்தியர்கள் (OCI - Overseas Citizens of India) தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் (National Pension System - NPS) முதலீடு செய்ய அனுமதிக்கப்பட இருக்கின்றார்கள்.
தேசிய ஓய்வூதிய முறைமை என்பது இந்தியாவில் தன்னார்வப் பங்களிப்பு முறையில் வரையறுக்கப்பட்ட ஒரு பங்களிப்பு ஓய்வூதிய முறையாகும்.
2004 ஆம் ஆண்டு ஜனவரி 1க்குப் பிறகு சேர்ந்த இந்திய அரசின் கீழ் பணியாற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் வரையறுக்கப்பட்ட ஓய்வூதியப் பயன்களை நிறுத்துவதற்கான இந்திய அரசின் முடிவின் காரணமாக NPS தொடங்கப்பட்டது.
இந்தத் திட்டம் ஆரம்பத்தில் அரசு ஊழியர்களுக்காக மட்டுமே வடிவமைக்கப் பட்டிருந்தாலும், 2009 ஆம் ஆண்டிலிருந்து 18 முதல் 60 வயதுக்குட்பட்ட இந்தியாவில் உள்ள அனைத்துக் குடிமக்களுக்கும் இதில் அனுமதியளிக்கப் பட்டுள்ளது.
இந்தியாவின் ஓய்வூதிய ஒழுங்குமுறை ஆணையமான ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையமானது (Pension Fund Regulatory and Development Authority - PFRDA) 2003 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23 அன்று இந்திய அரசால் நிறுவப் பட்டது.
PFRDA ஆனது தேசிய ஓய்வூதிய முறைமையை ஒழுங்குபடுத்தி அதனை நிர்வகிக்கின்றது. மேலும் இது இந்திய அரசாங்கத்தால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட, அமைப்புசாரா துறைக்காக வரையறுக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டப் பலன்களான அடல் ஓய்வூதியத் திட்டத்தையும் நிர்வகிக்கின்றது.