- மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (CBSE- Central Board of Secondary Education) முன்னாள் தலைவர் மற்றும் செயலாளரான வினித் ஜோஷியை தேசிய போட்டித் தேர்வுகள் முகமையின் (National Testing Agency-NTA) பொது இயக்குநராக மத்திய அரசு நியமித்துள்ளது.
- இந்நியமனம் தொடர்பான உத்தரவை மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித் துறை (Department of Personnel and Training) வெளியிட்டுள்ளது.
- வினித் ஜோஷி 1992-ஆம் ஆண்டின் மணிப்பூர் மாநில பணிப் பிரிவைச் சேர்ந்த ஓர் இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாவார்.
- தற்போது வினித் ஜோஷி ஐந்து ஆண்டுகள் பதவி காலத்திற்கு தேசிய போட்டித் தேர்வுகள் முகமையின் பொது இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தேசிய போட்டித் தேர்வுகள் முகமை
- உயர்கல்வி நிறுவனங்களுக்கு தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகளை நடத்துவதற்காக தேசிய போட்டித் தேர்வுகள் முகமையினை (National Testing Agency - NTA) அமைக்க மத்திய அமைச்சரவை அண்மையில் ஒப்புதல் வழங்கியது.
- தேசிய போட்டித் தேர்வுகள் முகமையானது இந்திய சங்கங்கள் பதிவுச் சட்டத்தின் கீழ் (Indian Societies Registration Act) ஓர் கூட்டுறவு சங்கமாக பதிவு செய்யப்படும்.
- மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தால் நியமிக்கப்படும் சிறந்த கல்வியாளரை தலைவராகக் கொண்டு தன்னாட்சி அதிகாரமும், சுய சார்பு கொண்ட முதன்மை தேர்வு அமைப்பாகவும் இந்த முகமை செயல்படும்.
- உயர்கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வுகளை நடத்த தேசிய போட்டித் தேர்வுகள் அமைப்பு உருவாக்கப்படும் என 2017-18க்கான பொது பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டிருந்தது.
- மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தால் (Central Board of Secondary Education - CBSE) தற்போது நடத்தப்படும் நீட் (NEET), ஜே.இ.இ (JEE) போன்ற பல்வேறு நுழைவுப் போட்டித் தேர்வுகளை ஆரம்ப கட்டமாக இந்த முகமை நடத்த உள்ளது.
- போட்டித் தேர்வாளர்களுக்கு போதுமான வாய்ப்பை வழங்குவதற்காக நுழைவுத் தேர்வுகள் ஆன்லைன் மூலம் ஆண்டிற்கு குறைந்தபட்சம் இருமுறை இந்த அமைப்பால் நடத்தப்படும்.
- முதலாம் ஆண்டின் தொடக்ககால செயற்பாட்டிற்காக இம்முகமைக்கு ஒரு முறை மானியமாக 25 கோடி அளிக்கப்படும். இதன் பின் இவை நிதியியல் தற்சார்புடையவையாக உருவாக்கப்படும்.
- மத்திய இடைநிலைக் கல்வி வாரியம், அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு (All India Council for Technical Education - AICTE) மற்றும் பிற நிறுவனங்களின் நுழைவுத் தேர்வுகளை நடத்த வேண்டிய பணிப் பொறுப்பு சுமைகளை இந்த அமைப்பு நீக்கும்.