பொது விவகாரங்கள் குறியீடு - 2018 (Public Affairs Index - PAI)
July 25 , 2018 2320 days 723 0
பொது விவகாரங்கள் குறியீடு 2018-ன் படி, 2016-ம் ஆண்டிலிருந்து தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக கேரளா சிறந்த ஆட்சிமுறையைக் கொண்ட மாநிலமாக முதலிடத்தில் உள்ளது. இதனையடுத்து தமிழ்நாடு இரண்டாம் இடத்தில் உள்ளது.
சிறந்த ஆட்சி முறையை வழங்கும் முதல் ஐந்து மாநிலங்களில் தெலுங்கானா, கர்நாடகா மற்றும் குஜராத் ஆகியவை முறையே மூன்றாவது, நான்காவது மற்றும் ஐந்தாவது இடங்களில் உள்ளன.
மத்தியப் பிரதேசம், ஜார்க்கண்ட் மற்றும் பீகார் ஆகியன PAI-ல் பின்தங்கிய இடங்களில் உள்ளன. இம்மாநிலங்களில் உள்ள அதிகபட்ச சமூக மற்றும் பொருளாதார ஏற்றத் தாழ்வுகளை இது குறித்துக் காட்டுகிறது.
சிறிய மாநிலங்களிடையே (2 கோடிக்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட) ஹிமாச்சலப் பிரதேசம் இப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இதனையடுத்து கோவா, மிசோரம், சிக்கிம் மற்றும் திரிபுரா ஆகியன அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
சிறிய மாநிலங்களிடையே நாகாலாந்து, மணிப்பூர் மற்றும் மேகாலயா ஆகியன இக்குறியீட்டில் மிகவும் பின்தங்கி உள்ளன.
பொது விவகாரங்கள் மையம் இந்த வருடம் இக்குறியீட்டில் ‘Children of India’ என்ற புதிய அத்தியாயத்தை சேர்த்துள்ளது. இது ஒவ்வொரு மாநிலமும் எந்த அளவிற்கு குழந்தைகளுக்கு ஏதுவான சூழ்நிலையை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன என்பதின் தகவல்களை தரும்.
கேரளா, ஹிமாச்சலப் பிரதேசம் மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்கள் குழந்தைகளுக்கு ஏதுவான வாழ்நிலையை வழங்குவதில் இக்குறியீட்டில் முதலிடத்தில் உள்ளன.
இக்குறியீடு 2016-லிருந்து பெங்களூருவின் பொது விவகாரங்கள் மையத்தினால் (Public Affairs Center - PAC) வெளியிடப்படுகிறது. PAC ஒரு இலாப நோக்கமற்ற, இந்தியாவின் ஆட்சிமுறையை மேம்படுத்தும் எண்ணம் கொண்ட சிந்தனை மையம் ஆகும்.
இது மறைந்த புகழ்பெற்ற இந்திய பொருளாதார வல்லுநர் மற்றும் அறிஞர் சாமுவேல் பாலினால் 1994-ல் நிறுவப்பட்டது.