2017-18 ஆம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வு அறிக்கையை (Economic Survey) மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.
இந்த ஆய்வு அறிக்கையில், 2018-2019 ஆம் நிதி ஆண்டில் நாட்டினுடைய மொத்த உள்நாட்டு உற்பத்தி (பொருளாதார வளர்ச்சி) 7 முதல்5 சதவீதமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடப்பு நிதி ஆண்டின் பொருளாதார வளர்ச்சி கடந்த நான்கு ஆண்டுகளைக் காட்டிலும் குறைவாக 5 சதவீதம் என்ற அளவுக்கே உள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டின் பொருளாதார வளர்ச்சியான (GDP-மொத்த உள்நாட்டு உற்பத்தி) 7.1 சதவீதத்தைக் காட்டிலும் இது குறைவானதாகும்.
முதல் நிலை மற்றும் இரண்டாம் நிலை துறைகளான வேளாண் மற்றும் தொழிற்துறைகளின் மோசமான செயல்பாடே (Poor Performance) மெதுவான பொருளாதார வளர்ச்சி விகிதத்திற்கு முக்கிய காரணம் என கூறப்பட்டுள்ளது.
ஆய்வறிக்கையைப் பற்றி
பொருளாதார ஆய்வறிக்கை என்பது, கடந்து சென்ற பன்னிரு மாதங்களில் (2016 ஏப்ரல்-2017 மார்ச்) நாட்டில் உண்டான பொருளாதார வளர்ச்சியை மதிப்பாய்வு செய்யும் ஓர் பொருளாதார ஆய்வு ஆறிக்கையாகும்.
இது குறுகிய கால வரம்பிலிருந்து நடுத்தர கால வரம்பு வரை (Short to Medium Term) நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உள்ள வாய்ப்புகளைப் பற்றியும், கடந்து சென்ற பன்னிரு மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட முக்கிய வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் அவற்றின் செயல்பாடுகளைப் பற்றியும் ஒரு பார்வையை தருவதோடு, அரசினால் மேற்கொள்ளப்பட்ட முக்கிய கொள்கை முன்னெடுப்புகளையும் அவற்றின் செயல்பாடுகள் மற்றும் விளைவுகளையும் முன்னெடுத்துக் காட்டும்.
ஒவ்வொரு ஆண்டும் பொது பட்ஜெட்டிற்கு முன்னர், மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பொருளாதார விவகாரத் துறையால் (Department of Economic Affairs) பொருளாதார ஆய்வறிக்கை தயார் செய்யப்பட்டு நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்படுகின்றது.
பட்ஜெட் அமர்வுகளின் போது கூட்டப்படும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இந்த பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படுகின்றது.
மத்திய நிதி அமைச்சகத்தின் தலைமை பொருளாதார ஆலோசகரின் (Chief Economic Advisor-CEA) வழிகாட்டுதலின் கீழ் இந்த ஆய்வறிக்கை தயார் செய்யப்படுகின்றது.
தலைமை பொருளாதார ஆலோசகர் என்பவர் இந்திய அரசின் முதன்மை பொருளாதார ஆலோசகராவார்.
இவர் இந்திய பொருளாதார பணிச்சேவை (Indian Economic Services – IES) பிரிவை கட்டுப்படுத்தும் பதவிசார் அதிகாரி ஆவார் (Ex-Officio Cadre Controlling Authority).
தலைமை பொருளாதார ஆலோசகர் மத்திய நிதி அமைச்சரின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் செயல்படுவார்.