TNPSC Thervupettagam

போவோ மன்றம் - பான்-கி-மூன்

April 13 , 2018 2291 days 713 0
  • ஐ.நா அமைப்பினுடைய முன்னாள் பொதுச் செயலாளரான (UN Secretary General)  பான்-கி-மூன் (Ban Ki-moon)  ஆசியாவிற்கான போவோ மன்றத்தின்  (Boao Forum for Asia)  தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
  • சீன மக்கள் வங்கியின் முன்னாள் ஆளுநரான ஜோவ் ஸியோச்சுவான் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
  • இதன் மூலம் இம்மன்றத்தின் தலைவராக உள்ள ஜப்பானைச் சேர்ந்த யசுவோ புகுடாவிற்குப் (Yasuo Fukuda)  பதிலாக தற்போது பான்-கி-மூன் தலைவராக பணியாற்ற உள்ளார்.

  • ஆசிய டாவோஸ் (Asian Davos) என்றழைக்கப்படும் இம்மன்றத்தின்   கூடுகையானது தற்போது சீனாவின் ஹைனான் மாகாணத்தில் (Hainan province)   நடைபெற்று வருகின்றது. இந்த  வருடாந்திர போவோ மன்றத்தின் இரண்டாவது அவை சந்திப்பின் போது இந்நியமனம் மேற்கொள்ளப்பட்டது.
  • தென்கொரியாவின் இராஜ்ஜியத் தூதரான (diplomat) பான்-கி-மூன் 2007ஆம் ஆண்டு ஜனவரி முதல் 2016-ஆம் ஆண்டின் டிசம்பர் வரை ஐ.நா. அவையின் 8-வது பொதுச் செயலாளராக பணியாற்றினார்.

ஆசியாவிற்கான போவோ மன்றம்     

  • ஆசியாவிற்கான போவோ மன்றம் 2011-ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது. இதனுடைய முதல் சந்திப்பு 2002-ஆம் ஆண்டு ஏப்ரலில் நடைபெற்றது. அன்றிலிருந்து ஆண்டுதோறும்  இம்மன்றத்தின் சந்திப்பு   நடத்தப்படுகின்றது.
  • ஆசியாவிற்கான போவோ மன்றமானது ஆண்டுதோறும் சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸில் (Davos) நடத்தப்படும் வருடாந்திர உலகப் பொருளாதார மன்றத்தை (World Economic Forum-WEF) மாதிரியாகக் கொண்டது.

  • இது ஓர் இலாப நோக்கமற்ற நிறுவனமாகும். உலகில், ஆசிய பிராந்தியத்தில்  ஏற்படுகின்ற மிக முக்கியமான பிரச்சினைகள் மீது தங்களது நிலைப்பாட்டை நீண்டகால அளவில் பகிர்ந்து கொள்வதற்கு ஆசியா மற்றும் பிற கண்டங்களில் உள்ள நாடுகளின் அரசுகள், வணிகத்துறை மற்றும் கல்வித்துறையைச் சேர்ந்த தலைவர்களுக்கு ஓர் உயர் மட்ட அளவிலான மன்றத்தை ஆசியாவிற்கான போவோ மன்றம்   நடத்துகின்றது.
  • இம்மன்றத்தின் தலைமையகம் சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் அமைந்துள்ள போதிலும் சீனாவின் ஹைனான் மாகாணத்தில் உள்ள போவோ நகரில் தான் ஆண்டுதோறும் நிரந்தரமாக இம்மன்றத்தின் கூடுகை நடத்தப்படுகின்றது.
  • சீனாவின் தெற்கு ஹைனான் மாகாணத்தில் அமைந்துள்ள போவோ (Boao)   நகரத்தின்   பெயர் கொண்டு இம்மன்றம் போவோ மன்றம் (Boao  forum) எனப் பெயரிடப்பட்டுள்ளது. 2002-ஆம் ஆண்டு முதல் இம்மன்றத்தினுடைய வருடாந்திர மாநாட்டின் நிரந்தர கூடுமிடமாக   போவோ நகரம் இருந்து வருகின்றது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்