குடிமக்கள் விண்ணப்பிக்காமலேயே குறிப்பறிந்துத் தானாகவே மக்களுக்கு சட்ட ரீதியான ஆவணங்களை வழங்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.
இந்த சட்டப்பூர்வமான சேவைகளில் மக்கள் விண்ணப்பித்த பிறகு அரசின் இ-சேவை மையங்கள் மூலம் வழங்கப்படும் சான்றிதழ்கள், ஆவணங்கள், உரிமைகள் போன்ற அரசு சேவைகளை வழங்குதலும் அடங்கும்.
புதிய நடைமுறை
தமிழ்நாடு மின் ஆளுமை நிறுவனமானது மாநிலத்தில் உள்ள 7 கோடி மக்களுக்கும் ஒரு தனித்துவமான “மக்கள் எண்” எனும் அடையாள எண்ணை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது.
இதன் மூலம் ஆதார் எண் மறைக்கப்பட்டு மக்கள் எண் எனும் பிழையேற்படுத்த முடியாத எண் பயன்படுத்தப்படும்.
இந்தத் தகவல்கள் மின்னணு முறையில் தமிழ்நாட்டில் வசிக்கும் ஒவ்வொருக்கும் தனித்தனியாக உருவாக்கப்பட்டுள்ள குடிமக்கள் பெட்டகத்தை அடையும்.
குடிமக்கள் அவர்களின் கைபேசி எண்ணைப் பயனாளர் குறியீடாகவும் ஒருமுறை பயன்படுத்தும் கடவுச் சொல்லையும் பயன்படுத்தித் தங்கள் சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களை தங்கள் பெட்டகத்தில் காணலாம்.
குடிமக்கள் தகுதி பெறும் போது ஒவ்வொரு துறை அல்லது நிறுவனங்களின் மென்பொருள்களின் தொடர் சங்கிலி (நம்பிக்கை இணையம்) தொழில்நுட்பமானது சான்றிதழ்களை உடனடியாக வழங்கும்.
பிறப்புச் சான்றிதழ் முதல் இறப்புச் சான்றிதழ் வரை பல்வேறு அரசுத் துறைகள் மற்றும் முகவர் நிறுவனங்களுக்கு இடையில் வழங்கப்பட்ட ஏராளமான சான்றிதழ்கள் / ஆவணங்கள் தானாகவே குடிமக்கள் பெட்டகத்தில் சேமிக்கப்படும்.