ஆகஸ்ட் 28ம் தேதியன்று, இந்தியாவின் தலைமை நீதிபதியின் தலைமையிலான ஐந்து மூத்த உச்ச நீதிமன்ற நீதிபதிகளைக் கொண்ட உச்ச நீதிமன்றக் கொலிஜியமானது மதராஸ் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியான வி.கே. தஹில்ரமணியை மேகாலயா உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப் பரிந்துரைத்தது.
இவருக்குப் பதிலாக மேகாலயா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியான அஜய் குமார் மிட்டல் மதராஸ் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக நியமிக்கப் பட்டுள்ளார்.
இதனை அடுத்து நீதிபதி தஹில்ரமணி தனது ராஜினாமாவை இந்தியக் குடியரசுத் தலைவரிடம் சமர்ப்பித்துள்ளார்.
இவர் 2001 ஆம் ஆண்டில் பம்பாய் உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப் பட்டார்.
இவர் 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் மதராஸ் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பதவி உயர்வு பெற்றார். இவர் 2020 ஆம் ஆண்டு அக்டோபரில் பணியில் இருந்து ஓய்வு பெறவிருந்தார்.
காந்த குமாரி பட்நாகர் (1992/93) மற்றும் இந்திரா பானர்ஜி (2017/18) ஆகியோருக்குப் பிறகு மதராஸ் உயர் நீதிமன்றத்தின் 3வது பெண் தலைமை நீதிபதி தஹில்ரமணி ஆவார்.