உலகளாவிய நோய்த்தடுப்புத் திறனூட்டல் திட்டத்தில் (UIP – Universal Immunisation Programme) மனித பாபில்லோமா வைரஸிற்கு எதிரான (Human Papilloma Virus – HPV) தடுப்பூசியை அறிமுகப்படுத்த தடுப்பூசி நோய்த்தடுப்புத் திறனூட்டல் மீதான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு (National Technical Advisory Group on Immunization – NTAGI) பரிந்துரை வழங்கியுள்ளது.
மனித பாபில்லோமா வைரஸானது 150-க்கும் மேற்பட்ட வைரஸ்களின் ஓர் குழுமமாகும். இவை பொதுவாக தீங்கற்றவை (Harmless). இவை தாமாகவே உடலை விட்டு வெளியேறிவிடும்.
எனினும் இந்த வைரஸின் சில வகைகள், உடலின் பாகங்களில் பாபில்லோமாக்களை அல்லது மருக்களை ஏற்படுத்தும்.
இது பாலியலுறவு வழியாக பரவும் பொதுவான நோய்த்தொற்றாகும்.
தொடுதலின் வழியாகவும் (Skin to Skin Contact) இவ்வைரஸ் பரவும்.
மனித பாபில்லோமா வைரஸானது பொதுவாக கர்ப்பப்பை வாய் புற்றுநோயோடு (Cervical Cancer) தொடர்புடையது.
உலக அளவில் HPV-யோடு தொடர்புடைய புற்றுநோய் பாதிப்பு சுமையை மிக அதிகளவில் கொண்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும்.
இந்த நோயினால், இந்தியாவில் ஆண்டிற்கு சுமார் 67,000 பெண்கள் உயிரிழக்கின்றனர்.
தற்போது இந்த வைரஸிற்கு எதிராக தனியார் மருத்துவ நிறுவனங்களினால் வழங்கப்படும் HPV தடுப்பூசிகளானது பயன்பாட்டின் போது பக்க விளைவுகளை ஏற்படுத்துவதால் மருத்துவ முன்சோதனை பிரச்சனைகளை (Clinical Trial) சந்தித்து வருகின்றது.