மூன்றாம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரையிலான பள்ளிக் குழந்தைகளின் கற்றல் அளவினை (learning levels) அதிகரிப்பதற்காக “மிஷன் பனியாட்” (Mission Buniyaad) எனும் திட்டத்தை டெல்லி அரசு தொடங்கியுள்ளது.
புதுதில்லியில் தொடக்கக் கல்வியானது (Primary education) டெல்லி மாநகராட்சி கார்ப்பரேஷனின் (Municipal Corporations of Delhi-MCDs) அதிகார வரம்பின் கீழ் உள்ளது.
மிஷன் பனியாட் திட்டத்தின் கீழ் மாணவர்களிடத்தில் வாசிப்பு அளவிலான மதிப்பிடல் (Reading level assessment) மேற்கொள்ளப்படும். அதன் அடிப்படையில் மாணவர்கள் சிறப்பு வகுப்புகளின் (specialised classes) சேர்க்கைக்குப் பதிவு செய்யப்படுவர்.
மிஷன் பனியாட் திட்டமானது டெல்லி மாநகராட்சிப் பள்ளிகளின் 3-ஆம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் மற்றும் டெல்லி அரசு பள்ளிகளின் 6-ஆம் வகுப்பு முதல் 9-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் ஆகியோருக்கு ஏப்ரல் முதல் ஜூன் வரை செயல்படுத்தப்படும்.
கடந்த மாதம் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கழகம் (National Council of Educational Research and Training - NCERT) 2017 ஆம் ஆண்டிற்கான தேசிய சாதனையாளர் கணக்கெடுப்பின் (National Achievement Survey) தரவுகளை வெளியிட்டதனைத் தொடர்ந்து இத்திட்டம் புதுதில்லியில் தொடங்கப்பட்டுள்ளது.
தில்லி அரசுப் பள்ளிகளில் 3 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் குறைந்த கற்றல் அளவினைக் (lowest learning levels) கொண்டுள்ளதாக இந்தக் கணக்கெடுப்பு கண்டறிந்துள்ளது.