மூத்த குடிமக்களுக்கு பிரதம மந்திரியின் வயா வந்தனா திட்டம்
July 22 , 2017 2729 days 1180 0
மத்திய நிதி அமைச்சகம், 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய மூத்த குடிமக்களுக்கு மட்டும் பிரத்யேகமாக பிரதம மந்திரியின் வயா வந்தனா திட்டம் (PMVVY), என்ற ஓய்வூதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ், மூத்த குடிமக்கள் 10 ஆண்டுகளுக்கு 8 சதவிகிதம் உத்தரவாத வட்டியை, அவர்கள் செய்த முதலீட்டின் அளவைப் பொறுத்துப் பெறுவார்கள்.
PMVVY இன் சிறப்பு அம்சங்கள்
இந்த PMVVY திட்டம் 2017 ஆம் ஆண்டு மே மாதம் 4 ஆம் தேதி முதல் 2018 ஆம் ஆண்டு மே மாதம் 3 ஆம் தேதி வரையில் கிடைக்கும்.
இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான உரிமம் இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்திடம் (Life Insurance Corporation of India - LIC) வழங்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தை நேரடியாகவோ அல்லது LIC யின் இணையதளம் வாயிலாகவோ வாங்க முடியும்.
இத்திட்டத்திற்கு ஜிஎஸ்டி வரிவிதிப்பிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. வட்டி விகிதங்களின் வீழ்ச்சியின்போது நிலையான வருமானம் பெற மூத்த குடிமக்களுக்கு கூடுதல் வாய்ப்புகளை வழங்குகிறது.
திட்டத்தின் 10 வருட காலக்கட்டத்தின் பொழுது ஓய்வுதியதாரர் இறக்க நேர்ந்தால் திட்டத்தின் மதிப்பு முழுவதும் அவரின் பயனாளிக்கு அளிக்கப்படும். 10 வருட காப்பீட்டுத் திட்ட காலத்தின் முடிவில், ஓய்வூதியதாரர் உயிருடன் இருக்கும்போது அவரின் இறுதி ஓய்வூதியத் தவணையுடன் சேர்த்து திட்டத்தில் குறிப்பிட்டுள்ள விலையும் செலுத்தப்படும்.
திட்டத்தின் 3 பாலிசி ஆண்டுகளுக்குப் பிறகு, பணத் தேவைகளைப் பூர்த்தி செய்ய, திட்டத்தில் குறிப்பிட்டுள்ள விலையில் 75 % வரை கடன் அளிக்கிறது. கடனுக்கான வட்டித் தொகை, ஓய்வூதியத் தவணையில் இருந்து பிடித்தம் செய்துகொள்ளப்படும் .
திட்டத்தின் சந்தாதாரரோ அல்லது அவர்களின் இல்லறத் துணையோ கடைநிலை உடல்நலக் குறைவால் (Terminal illness) பாதிக்கப்பட்டுள்ள நிலையில் திட்டத்தின் முதிர்ச்சி காலத்திற்கு முன்பே காப்பீட்டுச் சந்தா செலுத்துவதில் இருந்து விடுபடுவதற்கு இத்திட்டம் வழிவகை செய்கிறது. அப்படி விலகும் நிலையில், திட்டத்தில் குறிப்பிடப்படுள்ள விலையில் 98 % அவர்களுக்கு வழங்கப்படும்.
ஓய்வூதியத்திற்கான உச்சவரம்பு பயனாளியையும் அவரது இல்லறத் துணையையும் கொண்ட முழு குடும்பத்திற்கானதாகும்.
வட்டி உத்தரவாதத்திற்கும், உண்மையான வட்டிக்குமிடையில் உள்ள வித்தியாசத்திற்கும், நிர்வாகத்திற்கான செலவினங்களுக்கும் இடையேயான வேறுபாடுகளுக்கும் இந்திய அரசாங்கத்தால் மானியம் வழங்கப்பட்டு, LIC நிர்வாகத்திற்கு ஈடு செய்யப்படும்.