தமிழ் வளர்ச்சிக்கு அருந்தொண்டு ஆற்றிய ம.கோபாலகிருஷ்ண ஐயர் குறித்த இலக்கிய அரங்கம், சாகித்ய அகாடமி சார்பில் சென்னை பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்டது.
ம.கோபாலகிருஷ்ண ஐயர்
ம.கோபாலகிருஷ்ண ஐயர் (ம.கோ). கவிதை, மொழிபெயர்ப்பு, நாடகம், பத்திரிகை, இலக்கிய இதழ்கள் என பல்வேறு தளங்களில் இயங்கிய பன்முகத் திறமை கொண்டவர். மதுரா கல்லூரியில் தமிழ்த் துறைப் பேராசிரியராக 10 ஆண்டுகள் பணியாற்றினார். பின்னர், திருச்சி தேசியக் கல்லூரியில் தமிழ்த் துறைத் தலைமைப் பேராசிரியராக இருந்தார்.
மாணவர்கள் மனதில் தமிழ் ஆர்வத்தை வளர்க்கும் நோக்கத்துடன் ‘மதுரை மாணவர் செந்தமிழ் சங்கம்’ என்ற அமைப்பை 1901-ல் தொடங்கினார்.
மதுரை தமிழ்ச் சங்கத்தின் உறுப்பினராகவும், ஆய்வாளராகவும் இருந்துள்ளார்.
இளைஞர்களிடம் தாய்நாடு, தாய்மொழி மீதான பற்றை வளர்க்க, தனது ஆசிரியர் தொழிலையும், தான் நடத்திவந்த இதழ்களையும் பயன்படுத்தினார்.
இவரது கட்டுரைகளின் தொகுப்பு ‘அரும்பொருட்திரட்டு’ என்ற பெயரில் மதுரை தமிழ்ச் சங்கத்தால் 1915-ல் புத்தகமாக வெளியிடப்பட்டது. 1927-ல் மறையும் வரை தொடர்ந்து எழுதிவந்தார். ‘
விவேகோதயம்’, ‘நச்சினார்க்கினியன்’ ஆகிய இலக்கிய இதழ்களை அவரே ஆசிரியராக இருந்து வெளியிட்டார்.
தாகூர், உ.வே.சாமிநாத ஐயர், பரிதிமாற்கலைஞர், வள்ளல் பாண்டித்துரை தேவர் உள்ளிட்ட அறிஞர்கள் பற்றிய இவரது கவிதைகள் தொகுப்பு ‘தனிப்பாடல்கள்’ என்ற புத்தகமாக வந்துள்ளது.
‘விஸ்வநாதன்’ என்ற செய்யுள் நாடகத்தையும், ‘மவுன தேசிகர்’ என்ற வரலாற்றுப் புனைவு நகைச்சுவை நாடகத்தையும் எழுதியுள்ளார்.