ரஷ்ய அதிபர் தேர்தலில் மகத்தான ஒரு வெற்றி பெற்றதையடுத்து விளாடிமிர் புதின் மேலும் ஆறு ஆண்டுகளுக்கு அதிபர் பதவி வகிக்க உள்ளார்.
அவர் தனது அடுத்த ஆறு வருட பதவிக் காலத்தை நிறைவு செய்தால், பேரரசி கேத்தரினின் ஆட்சிக்குப் பிறகு மிக நீண்ட காலம் ரஷ்யத் தலைவராக பதவி வகித்தவர் என்ற பெருமையைப் புதின் பெறுவார்.
முன்னாள் பேரரசி 1762 மற்றும் 1796 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் 34 ஆண்டுகள் நான்கு மாதங்கள் வரை ரஷ்யாவை ஆட்சி செய்தார்.
சோவியத் ஒன்றியத்தின் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், 1923 முதல் 1954 ஆம் ஆண்டு வரை சுமார் 29 ஆண்டுகள் நாட்டின் அதிபராக பதவி வகித்தார்.
புதின் அவர்களின் பதவிக் காலத்தை கணக்கில் கொண்டால், ஸ்டாலின் அவர்களின் ஆட்சியை மிஞ்சி கடந்த 200 ஆண்டுகளில் மிக நீண்ட காலம் பதவி வகித்த ரஷ்யத் தலைவர் என்ற பெருமையை அவர் பெறுவார்.
1999 ஆம் ஆண்டு முதன்முதலில் ஆட்சிக்கு வந்த 71 வயதான புதின் ஏற்கனவே 25 ஆண்டுகளாக இந்தப் பதவியினை வகித்து வருகிறார்.