ருக்மாபாய் ராவத் என்பவர் காலனியக காலத்திய இந்தியாவில் பணியாற்றிய முதல் பெண் மருத்துவர் ஆவார்.
இவர் 11 வயதில் இருக்கும்பொழுது, 19 வயதான தாதாஜி பிகாஜி என்பவருடன் திருமணம் செய்து வைக்கப்பட்டார். இருவரும் இணைந்து வாழவில்லை. இதற்கிடையில் ருக்மாபாய் தன் கல்வியை நிறைவு செய்ய முடிவெடுத்தார்.
ருக்மாபாய் தனக்கு நடைபெற்ற திருமணம் முறையானது அல்ல என்று எதிர்ப்பு தெரிவித்தார். தன் மாற்றாந் தந்தையுடன் வாழ்ந்து வந்த ருக்மாபாய், மேற்படிப்பைத் தொடர முடிவு செய்தார். திருமணத்தைப் பற்றி சிந்திக்கக் கூடிய வயதும், நிலையும் இல்லாத பொழுது தன் சம்மதம் இன்றி திருமணம் நடத்தி வைக்கப்பட்டதாக வாதிட்டார்.
இந்நிலையில் ருக்மாபாய் தன்னுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்று அவர் கணவர் தாதாஜி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் தாதாஜிக்கு சாதகமான தீர்ப்பொன்றை வழங்கியது. அதன்படி ருக்மாபாய் கணவருடன் சேர்ந்து வாழ வேண்டும், தவறினால் ஆறு மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. சற்றும் அயராத ருக்மாபாய், தான் சிறைக்குச் செல்லும் தண்டனையை ஏற்றுக் கொள்வதாக துணிச்சலான முடிவெடுத்தார்.
இந்தத் தீர்ப்பு விக்டோரியா மகாராணியால் நிராகரிக்கப்பட்டது. இது பழமைவாத இந்தியர்களின் கடுமையான எதிர்ப்புக்கு மத்தியிலும், 1891 ஆம் ஆண்டின் திருமண வயது இசைவு சட்டம் இயற்ற வழிவகை செய்தது.