பொதுமக்கள் நலத்திற்காக பயன்படுத்தப்படும் பொருட்கள் அல்லது தொழில்நுட்பங்களை இராணுவத்திலும் பயன்படுத்தப்படுவது இரட்டை பயன்பாடு தொழில்நுட்பம் (Dual use Technology) என்று அழைக்கப்படுகிறது.
இத்தகைய இரட்டை பயன்பாட்டு தொழில்நுட்பங்கள் மற்றும் பொருட்களின் வர்த்தகம் மற்றும் பயன்பாட்டை ஒழுங்குமுறைப்படுத்தும் வாசினார் கூட்டமைப்பில் (Wassenaar Arrangement) இந்தியா இணைந்துள்ளது. இந்தியா வாசினார் கூட்டமைப்பில் சேரும் 42-ஆவது உறுப்பினர் ஆகும்.
வாசினார் அமைப்பில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் பங்குபெற்ற இரண்டு நாள் சந்திப்பு ஆஸ்திரியா நாட்டிலுள்ள வியன்னா நகரில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தின்போது இந்தியாவை கூட்டமைப்பில் இணைக்கும் முடிவு எடுக்கப்பட்டது.
இக்கூட்டமைப்பில் இந்தியா உறுப்பினர் தகுதியைப் பெற்றிருப்பது இந்திய தொழில் நிறுவனங்களுக்கு உயர் தொழில்நுட்பங்கள் கிடைப்பதற்கும், பாதுகாப்பு மற்றும் விண்வெளித் துறையில் உயர் தொழில்நுட்பங்களை பெறுவதற்கும் வழிவகை செய்யும்.
48 உறுப்பினர் நாடுகளைக் கொண்ட அணுவாற்றல் வழங்குனர் குழுவில் (Nuclear Supplier Group - NSG) இந்தியா நுழைவதற்கு வாசினார் கூட்டமைப்பு உறுப்பினர் தகுதி வலுவாக வாதிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்தில் 2016ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் ஏவுகணைத் தொழில்நுட்ப கட்டுப்பாட்டு அமைப்பில் இந்தியா இணைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.