வாசிப்பு மற்றும் எண்கணிதத் திறனில் மீட்சி – தமிழ்நாடு
January 30 , 2025 24 days 82 0
2024 ஆம் ஆண்டு வருடாந்திர கல்வி நிலை அறிக்கையின் (ASER) படி, 2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது தமிழ்நாடு மாநிலத்தில் வாசிப்பு மற்றும் எண்கணிதத்தில் குறிப்பிடத்தக்க மீட்சியானது பதிவாகியுள்ளது.
இதன்படி அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த மூன்றாம் வகுப்பு பயிலும் குழந்தைகளில் 4.8% குழந்தைகளால் மட்டுமே, 2022 ஆம் ஆண்டில் இரண்டாம் வகுப்பு பாடப் புத்தகத்தினை வாசிக்க முடிந்தது ஆனால் 2024 ஆம் ஆண்டில் இந்த முக்கிய எண்ணிக்கை 12% ஆக அதிகரித்துள்ளது.
2022 ஆம் ஆண்டில் பதிவான நிலைகளுடன் ஒப்பிடும்போது, வாசிப்புத் திறனில் 10.4% அதிகரிப்புடனும், எண்கணித திறனில் 5.8% அதிகரிப்புடனும் ஐந்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களின் வாசிப்பு மற்றும் எண்கணிதத் திறன்கள் மேம்பட்டுள்ளன.
மூன்றாம் வகுப்பில் கணக்கெடுக்கப்பட்ட குழந்தைகளில் சுமார் 27.7% பேர் கழித்தல் கணக்குகளையும் மற்றும் ஐந்தாம் வகுப்பில் கணக்கெடுக்கப்பட்ட குழந்தைகளில் சுமார் 20.7% பேர் வகுத்தல் கணக்குகளையும் செய்வதற்கான திறன்களைக் கொண்டிருந்தனர்.
தமிழ்நாடு அரசுப் பள்ளிகளின் சேர்க்கையில் சரிவு என்பது பதிவாகியுள்ளது.
2014 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் சேர்க்கை விகிதமானது, சுமார் 67.2 சதவீதத்தில் இருந்து 75.7% ஆக அதிகரித்திருந்தாலும், 2024 ஆம் ஆண்டில் அது 68.7% ஆகக் குறைந்து உள்ளது.
தனியார் பள்ளிகளின் சேர்க்கையானது நன்கு அதிகரித்து, 31 சதவீதத்துடன் கோவிட்-19 பெருந்தொற்றிற்கு முந்தைய நிலையை எட்டியுள்ளது.
2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடச் செய்யும் போது அங்கன்வாடிகளில் சேர்க்கையானது ஓரளவு குறைந்துள்ளது.
தமிழ்நாடு அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண் கணிதத் திறன் (FLN) பயிற்சியில், தேசிய சராசரியான 83.2 சதவீதத்தினை விட அதிகமாக தொடர்ந்து முன்னணியில் உள்ளது.
இதில் சுமார் 90.4% பள்ளிகள் FLN பயிற்சியில் கவனம் செலுத்துவதற்கான உத்தரவைப் பெறுகின்றன.