வாடிக்கையாளர் மனநிறைவு குறியீடு: ராய்ப்பூர் சுவாமி விவேகானந்தா விமான நிலையம் முதலிடம்
July 16 , 2017 2720 days 1409 0
சத்தீஸ்கர் மாநில தலைநகர் ராய்ப்பூரில் உள்ள சுவாமி விவேகானந்தா விமான நிலையம், 49 விமான நிலையங்களினை உள்ளடக்கிய வாடிக்கையாளர் மனநிறைவு குறியீடு [Customer Satisfaction Survey: CSI] கணக்கெடுப்பில் முதலிடம் பெற்றுள்ளது.
இதன் அடுத்தடுத்த இடங்களை உதய்ப்பூர் (2), அமிர்தசரஸ் (3) மற்றும் டேராடூன் (4) விமான நிலையங்கள் பெற்றுள்ளன. கடந்த இரண்டு ஆண்டுகளில், ராய்ப்பூர் விமான நிலையம் ஆனது இந்த அங்கீகாரத்தை மூன்றாவது முறையாகப் பெறுகிறது.
வாடிக்கையாளர் மனநிறைவு குறியீடு கணக்கெடுப்பு
வாடிக்கையாளர் மனநிறைவு என்பது இந்திய வானூர்தி நிலைய ஆணையத்தின் (Airport Authority of India - AAI) முக்கிய செயல்திறன் நோக்கம் ஆகும்.
இதனை மதிப்பீடு செய்ய இந்திய வானூர்தி நிலைய ஆணையம் சுதந்திரமான அமைப்பு ஒன்றை நியமித்து வாடிக்கையாளர் மனநிறைவு குறியீடு கணக்கெடுப்பை (CSI Survey) மேற்கொள்கிறது. போக்குவரத்து, பயணிகளின் வசதிகள், தூய்மை, வாகனங்கள் நிறுத்துமிடம் போன்ற பல்வேறு அளவீடுகள் இந்தக் கணக்கெடுப்பில் அடங்கும்.
சுவாமி விவேகானந்தா விமான நிலையம்
சுவாமி விவேகானந்தா விமான நிலையமானது ராய்ப்பூர் மற்றும் நயா ராய்ப்பூர் இடையே மானா எனும் இடத்தில் அமைந்துள்ளது.
இந்த விமான நிலையமானது இந்தியாவின் பரபரப்பான விமான நிலையங்கள் பட்டியலில் பயணிகள் போக்குவரத்து அளவீட்டின் அடிப்படையில் 28வது இடத்திலும் "விமானங்களின்" இயக்கத்தின் அளவீட்டு அடிப்படையில் 31வது இடத்திலும் உள்ளது.
சுவாமி விவேகானந்தர் தம்முடைய இளம் வயதின் இரண்டு ஆண்டுகளை ராய்ப்பூரில் கழித்தார். அதன் நினைவாக ராய்ப்பூர் விமான நிலையம் என்ற பெயர் 2012ஆம் ஆண்டு முதல் சுவாமி விவேகானந்தா விமான நிலையம் என்று அழைக்கப்பெறுகிறது.