பொருளாதார நுண்ணறிவுப் பிரிவின் (Economist Intelligence Unit’s) “உலகளாவிய வாழ்க்கைச் செலவு 2018; எந்த உலக நகரங்கள் அதிகபட்ச வாழ்க்கைச் செலவைக் கொண்டுள்ளன” (“Worldwide cost of living 2018; Which global cities have the highest cost of living”) என்ற அறிக்கைப்படி, 133 உலக நகரங்களுள் உலகின் ஐந்தாவது மலிவான நகரமாக (cheapest city) பெங்களூர் உள்ளது.
சென்னை மற்றும் புதுதில்லி ஆகியவை முறையே 8-வது மற்றும் 10-வது இடங்களில் உள்ளன. இவை வாழ்வதற்கு மிகவும் மலிவான முதல் 10 நகரங்களுள் ஒன்றாகும் (Cheapest Cities).
போர் சூழல்களால் சிதிலமடைந்த சிரியாவின் தலைநகரமான டமாஸ்கஸ் (Damascus) மலிவான நகரங்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. அதனைத் தொடர்ந்த இடத்தில் தென் அமெரிக்காவில் உள்ள வெனிசூலா நாட்டின் தலைநகரமான கராகஸ் (Caracas) உள்ளது.
தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக உலகின் மிகவும் செலவு மிக்க (Most expensive City) நகரமாக சிங்கப்பூர் தொடர்கின்றது.
மிகவும் விலைச் செலவு மிக்க நகரங்களுள் முதலிடத்திலுள்ள சிங்கப்பூரைத் தொடர்ந்து இரண்டாவது, மூன்றாவது மற்றும் நான்காவது இடங்களில் முறையே பிரான்சின் பாரிஸ் நகரமும், சுவிட்சர்லாந்து நாட்டின் ஜீரிச் நகரமும், சீனாவின் ஹாங்காங் நகரமும் உள்ளன.
உலகளாவிய வாழ்க்கைச் செலவு (Worldwide Cost of Living) அறிக்கையானது ஆண்டிற்கு இருமுறை வெளியிடப்படும் பொருளாதார நுண்ணறிவுப் பிரிவின் கணக்கெடுப்பாகும்.
இந்த அறிக்கையானது பல்வேறு உலக நகரங்களில் நிலவுகின்ற 160 பொருட்கள் மற்றும் சேவைகளின் 400-க்கும் மேற்பட்ட தனிப்பட்ட விலைகளை ஒப்பிட்டு வெளியிடப்படுகின்றது.
உணவு, குடிபானம், உடைகள், வீட்டு உபயோகப் பொருட்கள், வீட்டு வாடகைகள், போக்குவரத்து, தனியார் பள்ளிகள், கேளிக்கை செலவுகள், போன்றவற்றினுடைய பல்வேறு விலை அம்சங்களை ஒப்பிட்டு அதனடிப்படையில் உலக நகரங்களின் அந்தஸ்தை இந்த அறிக்கை வெளியிடுகின்றது.