இஸ்ரோ நிறுவனமானது விண்வெளியில் இரண்டு செயற்கைக்கோள்களை மிகவும் வெற்றிகரமாக இணைத்துள்ளதன் மூலம் அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக இத்தகையச் சாதனையினைப் படைத்த நான்காவது நாடாக இந்தியா மாறியுள்ளது.
ஸ்பேடெக்ஸ் (விண்வெளியில் செயற்கைக்கோள் இணைப்பு) திட்டமானது, PSLV என்ற விண் ஏவுகலத்தினால் விண்ணில் ஏவப்பட்ட இரண்டு சிறிய செயற்கைக்கோள்களை இணைப்பதற்கான தொழில்நுட்பச் செயல்விளக்கத் திட்டமாகும்.
இஸ்ரோ நிறுவனமானது டிசம்பர் 30 ஆம் தேதியன்று SDX01- சேஸர் மற்றும் SDX02 ஆகிய இரண்டு சிறிய விண்கலங்களை விண்ணில் ஏவியுள்ளது.
இந்தத் திட்டத்தில், முதலில் இரண்டு செயற்கைக் கோள்களும் இடையில் 20 கிலோ மீட்டர் என்ற தொலைவிலான இடைவெளியுடன், சேஸர் செயற்கைக்கோள் ஆனது இரண்டு விண்கலங்களின் இறுதி இணைப்பிற்கு முன்னதாக, 5 கி.மீ, 1.5 கி.மீ, 500 மீ, 225 மீ, 15 மீ மற்றும் 3 மீ என தொலைவினைக் குறைப்பதன் மூலம் இலக்கு நிர்ணயிக்கப் பட்ட செயற்கைக்கோளை நெருங்கியது.