கார்பன் உமிழ்வைக் குறைப்பதற்கான முன்னெடுப்புகளை ஆதரிப்பதற்காக ஐந்து இடங்களில் 11 புதிய அணு உலைகளை நிறுவ சீனா ஒப்புதல் அளித்துள்ளது.
அனைத்து 11 அலகுகளுக்குமான மொத்த முதலீடு ஆனது குறைந்தது 220 பில்லியன் யுவான் (31 பில்லியன் டாலர்) ஆகும் என்பதோடு இதன் கட்டுமானப் பணிகள் நிறைவடைய சுமார் ஐந்து ஆண்டுகள் ஆகும்.
உலகில் வேறு எந்த நாட்டையும் விட சீனாவில் அதிக அணு உலைகள் கட்டமைக்கப் பட்டு வருகின்றன.
மேலும், கடந்த இரண்டு ஆண்டுகளில் தலா 10 புதிய அணு உலைகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
மொத்த மின்சாரத் தேவையில் 5 சதவீதத்திற்குச் சமமான மொத்தத் திறனுடன் அந்த நாட்டில் தற்போது 56 அணு உலைகள் இயங்கி வருகின்றன.
2030 ஆம் ஆண்டிற்குள் உலகின் முன்னணி அணுசக்தி உற்பத்தியாளராக பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவை விஞ்சி சீனா முன்னிலை பெறும் என எதிர்பார்க்கப் படுகிறது.