நாட்டின் 14-ஆவது குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூலை 17 அன்று நடைபெறவுள்ளது.
தற்போதைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் வரும் ஜூலை 24-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து அடுத்த குடியரசுத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படவுள்ளார்.
குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான அறிவிக்கையை ஜூன் மாதம் 7-ஆம் தேதி அப்போதைய தலைமைத் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி வெளியிட்டார்.
இந்தத் தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் ராம்நாத் கோவிந்த் போட்டியிடுகிறார்.
காங்கிரஸ் உள்ளிட்ட 18 எதிர்க்கட்சிகளின் சார்பில் பொது வேட்பாளராக மக்களவை முன்னாள் தலைவர் மீரா குமார் போட்டியிடுகிறார்.
குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தல் களத்தில் இவர்கள் இருவர் மட்டுமே உள்ளனர். இவர்களில் அதிக வாக்குகள் பெறுபவர் அடுத்த குடியரசுத் தலைவராகப் பதவியேற்பார்.
இந்தத் தேர்தலில் நாடு முழுவதும் உள்ள எம்.எல்.ஏக்களும், எம்.பி.க்களும் நேரடியாக வாக்களித்து புதிய குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுக்கவுள்ளனர்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை
குடியரசுத் தலைவர் தேர்தலில் மக்களவை உறுப்பினர்கள் 543 பேர், மாநிலங்களவை உறுப்பினர்கள் 233 பேர் , மொத்த சட்டப்பேரவை உறுப்பினர்கள் 4,120 என மொத்தம் 4,896 பேர் வாக்களிக்கவுள்ளனர்.
சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் (எம்.பி மற்றும் எம்.எல்.ஏ) வாக்குகள் ஒரு குறிப்பிட்ட மதிப்பினை உடையது. இந்த வாக்குகளின் மதிப்பு அவர்கள் சார்ந்த மாநிலத்தின் அளவு மற்றும் மக்கள் தொகையினை பொறுத்தது.
எம்.எல்.ஏவின் வாக்கு மதிப்பு
ஒரு எம்.எல்.வின் வாக்கு மதிப்பு என்பது, அவர் சார்ந்த மாநிலத்தின் மக்கள் தொகையை மொத்தத் தொகுதிகளின் எண்ணிக்கையால் வகுத்து ஆயிரத்தால் பெருக்கிக் கிடைக்கும் மதிப்பாகும். பிறகு அந்த மதிப்புடன் அந்த மாநிலத்தின் மொத்தத் தொகுதிகளின் எண்ணிக்கையைப் பெருக்கும்போது அந்த மாநிலத்தின் அனைத்து எம்.எல்.ஏக்களின் மொத்த வாக்கு மதிப்பும் கிடைத்து விடும்.
கடந்த 1971-ஆம் ஆண்டின் மக்கள் தொகையின்படி அனைத்து மாநிலங்களின் எம்எல்ஏக்களின் மொத்த வாக்கு மதிப்பு 5,49,495 என்று கணக்கிடப்பட்டுள்ளது.
எம்.பி யின் வாக்கு மதிப்பு
ஒரு எம்.பி யின் வாக்கு மதிப்பு என்பது அனைத்து மாநில எம்.எல்.ஏக்களின் மொத்த வாக்கு மதிப்புடன் (5,49,495) மொத்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையால் (776) வகுத்துக் கிடைக்கும் மதிப்பாகும்.
அதன்படி ஒரு எம்.பி.யின் வாக்கு மதிப்பு 708 என்றும் மொத்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாக்கு மதிப்பு 5,49,408 என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.
மொத்த வாக்கு மதிப்புகள்
அனைத்து மாநில எம்எல்ஏக்களின் மொத்த வாக்கு மதிப்பையும் (5,49,495) அனைத்து எம்.பி.க்களின் மொத்த வாக்கு மதிப்பையும் (5,49,408) கூட்டிக் கிடைக்கும் மதிப்பாகும்.