14-ஆவது குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவியேற்றார்
July 26 , 2017 2725 days 1082 0
நாட்டின் 14-ஆவது குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் (71) பதவியேற்றார். குடியரசுத் தலைவர் பதவிக்கு கடந்த 17-ஆம்தேதி தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளரான ராம்நாத் கோவிந்த், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மீராகுமாரைத் தோற்கடித்தார். கோவிந்த் 65 சதவீத வாக்குகளுடன்வெற்றி பெற்றார்.
இந்நிலையில், புதிய குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் ஜூலை 26, 2017 அன்றுபதவியேற்றார். அவருக்கு தில்லியில் நாடாளுமன்ற வளாத்தில் நடைபெற்ற விழாவில் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
உத்தரப் பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பி.யாக 1994 முதல் 2006 வரை இருமுறை தொடர்ச்சியாகப் பதவிவகித்தார். பீகார் ஆளுநராக இருந்த அவர், அண்மையில் குடியரசுத்தலைவர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.
மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவர் கே.ஆர். நாராயணனுக்குப் பிறகு இந்த உயர்பதவிக்கு வந்துள்ள தலித்சமூகத்தைச் சேர்ந்த இரண்டாவது தலைவர் ராம்நாத் கோவிந்த்ஆவார். பாஜகவைச் சேர்ந்த ஒருவர் இப்பதவிக்கு வருவது இதுவே முதல்முறையாகும்.