2018 ஆம் ஆண்டில் இந்தியாவில் புலிகளின் நிலை குறித்த அறிக்கை
July 31 , 2020 1582 days 631 0
மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சகமானது சர்வதேசப் புலிகள் தினத்தன்று (29 ஜூலை) “இந்தியாவில் புலிகள், இணை இரை பிடித்துண்ணிகள், இரைகளின் நிலை” குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இந்தியாவின் புலிகள் பாதுகாப்புத் திட்டமானது 9 புலிகள் காப்பகங்களுடன் 1973 ஆம் ஆண்டில் தொடங்கப் பட்டுள்ளது.
இந்தியாவானது உலகின் மொத்தப் புலிகளின் எண்ணிக்கையில் 70% அளவினைக் கொண்டு உள்ளது.
2018-19 ஆம் ஆண்டிற்கான தேசியப் புலிகள் நிலை ஆய்வறிக்கையானது இந்தியாவில் இருக்கும் ஒட்டு மொத்தப் புலிகளின் எண்ணிக்கை 2967 (2014 ஆம் ஆண்டிலிருந்து 2226 என்ற அளவிலிருந்து 33% அதிகரிப்பு) என்று கணக்கிட்டுள்ளது.
2967 புலிகளுடன் இந்தியாவானது 2022 ஆம் ஆண்டில் புலிகளின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கும் 2010 ஆம் ஆண்டின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் பிரகடன இலக்கை அடைவதில் 4 ஆண்டுகள் முன்னிலையில் இருக்கின்றது. அதாவது 4 ஆண்டுகளுக்கு முன்பே இந்த இலக்கை இந்தியா எட்டியுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலமானது 526 புலிகளுடன் அதிக எண்ணிக்கையிலான அளவில் புலிகளைக் கொண்டுள்ளது. இதற்கு அடுத்து கர்நாடகா (524) மற்றும் உத்தராகண்ட் (442) ஆகிய மாநிலங்கள் அதிக அளவில் புலிகளைக் கொண்டுள்ளன.
சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்கள் புலிகளின் எண்ணிக்கையில் சரிவைச் சந்தித்து உள்ளன.
உத்தராகண்ட்டில் உள்ள கார்பெட் புலிகள் காப்பகமானது தனது காப்பகத்திற்குள் அதிக எண்ணிக்கையிலான (231) புலிகளைக் கொண்டுள்ளது.
மத்தியப் பிரதேசத்தில் உள்ள பென்ச் புலிகள் காப்பகமானது அதிக எண்ணிக்கையிலான புலிகளைப் பதிவு செய்துள்ளது. அதே வேளையில் தமிழ்நாட்டில் உள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகமானது 2014 ஆம் ஆண்டு முதல் “அதிக அளவிலான முன்னேற்றத்தை” பதிவு செய்துள்ளது.
தம்பா காப்பகம் (மிசோரம்), பக்சா காப்பகம் (மேற்கு வங்காளம்), பலமு காப்பகம் (ஜார்க்கண்ட்) ஆகியவை புலிகள் எண்ணிக்கை எதையும் கொண்டிருக்கவில்லை.
நாகார்ஜுனசாகர் ஸ்ரீசைலம் புலிகள் காப்பகமானது இந்தியாவில் உள்ள மிகப்பெரிய புலிகள் காப்பகமாகும்.
இந்தக் காப்பகமானது ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் 5 மாவட்டங்களில் பரவியுள்ளது.
இந்தப் பகுதியானது பெரும்பாலும் நல்லமலா மலையைக் கொண்டுள்ளது.