அர்ஜென்டினாவின் தலைநகரான பியூனோஸ் அயர்ஸில் நடைபெற்ற (2018 ஆம் ஆண்டு நவம்பர் 30 மற்றும் டிசம்பர் 01) 13வது G20 மாநாட்டின் நிறைவு நிகழ்ச்சியின் போது 2022 ஆம் ஆண்டில் 17வது G20 மாநாட்டை முதன்முறையாக இந்தியா நடத்தவிருப்பது உறுதி செய்யப் பட்டது.
2022 ஆம் ஆண்டில் இந்தியா 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடவிருக்கிறது. 2022 ஆம் ஆண்டிற்குப் பதிலாக 2021 ஆம் ஆண்டில் G-20 மாநாட்டை நடத்துமாறு இத்தாலியிடம் இந்தியா கோரியிருந்தது.
G-20 நிறைவு மாநாட்டின்போது இந்தியா தனது ஒன்பது அம்சத் திட்டத்தை சமர்ப்பித்தது. பொருளாதாரக் குற்றங்களில் ஈடுபட்டு வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்லும் குற்றவாளிகள் குறித்து G-20 நாடுகளுக்கிடையே வலுவான மற்றும் உயிர்ப்புள்ள ஒத்துழைப்பு ஏற்படுத்துவதை இந்த ஒன்பது அம்சத் திட்டம் வலியுறுத்துகிறது.
தகவல் பரிமாற்றம் குறித்த சர்வதேச ஒத்துழைப்பு, தக்க நேரம் மற்றும் விரிவான தகவல் அறிக்கை ஆகியவற்றை ஏற்படுத்துவதில் முன்னுரிமை மற்றும் கவனம் செலுத்த வேண்டும் என்று நிதியியல் நடவடிக்கை பணிக் குழுவிற்கு இந்தியா பரிந்துரைத்தது (FATF - Financial Action Task Force).