தேசியக் குற்ற ஆவணக் காப்பகத்தின் (NCRB) அறிக்கையான இது மத்திய உள்துறை அமைச்சகத்தால் வெளியிடப்பட்டடது.
1986 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட NCRB அமைப்பானது குற்றம் மற்றும் குற்றவியல் கண்காணிப்பு வலையமைப்பு மற்றும் அமைப்புகள் (சிசிடிஎன்எஸ்), குற்றப் புள்ளியியல், கைரேகைகள் மற்றும் பயிற்சிப் பிரிவு என நான்கு பிரிவுகளைக் கொண்டுள்ளது.
இது இந்தியத் தண்டனைச் சட்டம் (IPC) மற்றும் மாநில உள்ளூர் சட்டங்கள் (SLL) ஆகியவற்றின் அடிப்படையில் குற்றம் தொடர்பான தகவல்களைச் சேகரித்து ஆய்வு செய்கிறது.
NCRBயின் இந்த அறிக்கை, பதிவு செய்யப்பட்ட குற்ற நிகழ்வுகளை மட்டுமே கொண்டு உள்ளதே தவிர, உண்மையில் நிகழ்ந்த குற்ற எண்ணிக்கைகளை அல்ல என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
பெருநகரங்களில் ஒரு லட்சம் மக்கள்தொகைக்கு அடையாளம் காணக்கூடிய குற்றங்கள் (IPC) என்ற விகிதத்தில் கொல்கத்தா தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக இந்தியாவின் பாதுகாப்பான நகரமாக அதன் இடத்தைப் பெற்றுள்ளது.
இதில் புனே (மகாராஷ்டிரா) மற்றும் ஹைதராபாத் (தெலுங்கானா) ஆகியவை முறையே இரண்டு மற்றும் மூன்றாவது இடங்களைப் பிடித்தன.
அதைத் தொடர்ந்து சென்னை, கோவை, சூரத் ஆகிய நகரங்கள் உள்ளன.
ஒட்டு மொத்தப் பாதுகாப்பில் கொல்கத்தா சிறந்து விளங்கும் அதே வேளையில், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அங்கு அதிகரித்துள்ளதை இந்த அறிக்கை எடுத்துக் காட்டுகிறது.
கொல்கத்தாவில் பெண்களுக்கு எதிரான குற்ற விகிதம் ஒரு லட்சம் மக்கள்தொகைக்கு 27.1 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது, இது கோயம்புத்தூர் (12.9) மற்றும் சென்னை (17.1) ஆகியவற்றின் எண்ணிக்கைகளை விட அதிகமாக உள்ளது.
2022 ஆம் ஆண்டில் நாட்டிலேயே பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான முதல் தகவல் அறிக்கைகளின் (எஃப்ஐஆர்) எண்ணிக்கையில் டெல்லி முதலிடத்தில் உள்ளது.
ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் தெலுங்கானா போன்ற மாநிலங்களில் 2022 ஆம் ஆண்டில் பட்டியல் சாதியினர் (SC) மற்றும் பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் (ST) மக்களுக்கு எதிரான வழக்குகள் அதிகரித்துள்ளன.
மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் இதன் முக்கியப் பங்களிப்பாளர்களாக நீடிக்கின்றன.
மகாராஷ்டிராவில் விலங்குகள் தாக்குதல் தொடர்பாக அதிக வழக்குகள் பதிவாகி உள்ளன.
அதைத் தொடர்ந்து உத்தரப் பிரதேசம், ஒடிசா, தமிழ்நாடு, சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் உள்ளன.
அதிக எண்ணிக்கையிலான விலங்குகள் கடி வழக்குகள் ராஜஸ்தானில் பதிவாகி உள்ளன, அதைத் தொடர்ந்து முறையே மத்தியப் பிரதேசம், தமிழ்நாடு மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகியவை உள்ளன.
இந்தியத் தண்டனைச் சட்ட (IPC) குற்றங்களின் கீழ் அதிக குற்றப் பத்திரிகை பதிவு விகிதங்களைக் கொண்ட மாநிலங்கள் கேரளா, புதுச்சேரி மற்றும் மேற்கு வங்கம் ஆகியவை ஆகும்.