2024 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையின் சிறப்பம்சங்கள்
July 26 , 2024 123 days 229 0
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள், தொடர்ந்து ஏழாவது முறையாக 2024-25 ஆம் நிதியாண்டின் நிதிநிலை அறிக்கையினை ஜூலை 23 ஆம் தேதியன்று தாக்கல் செய்தார்.
இதனால், முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாயின் சாதனையை அவர் முறியடித்து உள்ளார்.
கடன்கள் தவிர்த்து மொத்த வரவுகள் மற்றும் மொத்தச் செலவினங்கள் முறையே 32.07 லட்சம் கோடி ரூபாய் மற்றும் 48.21 லட்சம் கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
நிகர வரி வரவுகள் 25.83 லட்சம் கோடி ரூபாயாகவும், நிதிப் பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.9% ஆகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், அரசாங்கம் அடுத்த ஆண்டு நிதிப் பற்றாக்குறையை 4.5 சதவீதத்திற்கும் கீழ் எட்டுவதை இலக்காகக் கொண்டுள்ளது.
2024-25 ஆம் நிதியாண்டில் தேதியிடப்பட்ட பத்திரங்கள் மூலம் மொத்த மற்றும் நிகரச் சந்தைக் கடன்கள் முறையே 14.01 லட்சம் கோடி ரூபாய் மற்றும் 11.63 லட்சம் கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
அவர் மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் மூன்று புதிய ஊழியர்கள் சார்ந்த ஊக்கத் திட்டங்களை அறிவித்துள்ளார்.
எந்தவொரு அரசாங்கத் திட்டங்களிலிருந்தும் இது வரை பயனடையாத மாணவர்கள் உள்நாட்டுக் கல்வி நிறுவனங்களில் கல்வி பெறுவதற்காக 10 லட்சம் ரூபாய் வரை நிதியுதவிக் கடன்களைப் பெறுவர்.
2025 ஆம் நிதியாண்டில் புதிய வருமான வரி வரம்புகளின் கீழ், சம்பளம் பெறும் ஊழியர்களுக்கான நிலையான வரி விலக்கு வரம்பானது 50,000 ரூபாயிலிருந்து 75,000 ரூபாயாக உயர்த்தப்படும்.
தங்கம் மற்றும் வெள்ளி மீதான அடிப்படை சுங்க வரியினை 6 சதவீதமாகவும், பிளாட்டினம் மீது 6.4 சதவீதமாகவும் குறைக்க இந்த நிதிநிலை அறிக்கையில் முன் மொழியப்பட்டது.
நிதியமைச்சர் தனது நிதிநிலை அறிக்கை உரையில் பீகார் மாநிலத்திற்கான பல்வேறு திட்டங்களை அறிவித்தார் என்பதோடு இந்தத் திட்டங்கள் "பூர்வோதயா" என்ற பெரிய திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
இது பீகார், ஜார்க்கண்ட், மேற்கு வங்காளம், ஒடிசா மற்றும் ஆந்திரப் பிரதேசம் உள்ளிட்ட கிழக்கு மாநிலங்களின் அனைத்து மேம்பாடுகளையும் உள்ளடக்கியது.
பீகாரில் மொத்தம் 26,000 கோடி ரூபாய் செலவில் அதிவேக நெடுஞ்சாலைகள் அமைக்க அரசாங்கம் நிதியுதவி அளிக்கும்.
பெண்கள் தலைமையிலான மேம்பாட்டினை ஊக்குவிப்பதற்காக, பெண்கள் மற்றும் சிறுமிகளுக்குப் பயனளிக்கும் திட்டங்களை அறிமுகப்படுத்துவதற்காக வேண்டிஇந்த நிதிநிலை அறிக்கையில் 3 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டு உள்ளது.
ஆரம்ப நிலை பூஜ்ஜியம் முதல் 3 லட்சம் ரூபாய் வரையிலான வரிவிகித வரம்பைத் தவிர்த்து, மற்ற ஒவ்வொரு வரி வரம்புகளின் அளவும் மாறாமல் இருப்பதையடுத்து வரி விதிப்பு விகிதம் மாறாமல் உள்ளது.
முன்பு 3 லட்சம் ரூபாயிலிருந்து 6 லட்சம் ரூபாய் ஆக இருந்த வரம்பானது தற்போது 3 லட்சம் ரூபாயிலிருந்து 7 லட்சம் ரூபாயாக விரிவுபடுத்தப் படும்.
இருப்பினும், 5% என்ற வரிவிதிப்பு விகிதம் ஆனது மாறாமல் உள்ளது.
இதே போல், மற்ற அடுக்குகள், அதாவது 6 முதல் 9 லட்சம் ரூபாய், 9 முதல் 12 லட்சம் ரூபாய், 12 முதல் 15 லட்சம் ரூபாய் மற்றும் அதற்கு மேல் என்ற வரம்பானது 7 முதல் 10 லட்சம் ரூபாய், 10 முதல் 12 லட்சம் ரூபாய், 12 முதல் ரூபாய் 15 லட்சம் மற்றும் அதற்கு மேல் என்ற வரம்புகளாகத் திருத்தியமைக்கப்படும்.