40 ஆண்டு தடைக்குப் பின் இந்தியா வருகிறது அமெரிக்க கச்சா எண்ணெய்
August 18 , 2017 2715 days 989 0
40 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக அமெரிக்க கச்சா எண்ணெய் ஏற்றிய சரக்குக் கப்பல்கள் அடுத்த மாதம் இந்தியா வருகின்றன.
இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்வதற்கு சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்கா தடை விதித்தது.
எனினும், இந்தியா - அமெரிக்கா இடையிலான உறவு அண்மைக் காலமாக வலுவடைந்து வரும் நிலையில், இந்தியாவுக்கான கச்சா எண்ணெய் ஏற்றுமதி தடையை இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அப்போதைய அமெரிக்க அதிபர் ஒபாமா நீக்கினார்.
அதையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஜூன் மாதம் 26-ஆம் தேதி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பைச் சந்தித்துப் பேசியபோது, எரிசக்தித் துறையில் இருநாட்டு ஒத்துழைப்பை மேம்படுத்த ஒப்புக் கொள்ளப்பட்டது.
அதையடுத்து, இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் உள்ளிட்ட நிறுவனங்கள் அமெரிக்காவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க முன்வந்தன. இதன்மூலம், உலகின் மூன்றாவது மிகப் பெரிய எண்ணெய் இறக்குமதி நாடான இந்தியா, அமெரிக்காவிடமிருந்து எண்ணெய் கொள்முதல் செய்யும் தென் கொரியா, ஜப்பான், சீனா ஆகிய மூன்று நாடுகளுடன் இணைந்தது.
இந்தச் சூழலில், சுமார் 10 கோடி டாலர் (ரூ.636 கோடி) மதிப்பிலான கச்சா எண்ணெய் பேரல்களை ஏற்றிய சரக்குக் கப்பல்கள் அமெரிக்காவின் பல்வேறு துறைமுகங்களில் இருந்து இந்தியாவின் ஒடிஸா மாநிலத்தில் உள்ள பாரதீப் துறைமுகம் நோக்கி புறப்பட்டுள்ளன.
இந்த மாதம் 6 முதல் 14-ஆம் தேதி வரை அமெரிக்காவிலிருந்து புறப்பட்ட அந்தக் கப்பல்கள், அடுத்த (செப்டம்பர்) மாத இறுதியில் இந்தியா வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.