அரியானாவின் ராக்கிகர்ஹி என்ற தளத்தில் நடைபெற்று வரும் ஒரு தொல்லியல் அகழ்வாராய்ச்சியில், ஏறக்குறைய சுமார் 5,000 ஆண்டுகளுக்கு முந்தைய அதிநவீன நீர் மேலாண்மை அமைப்புகள் மற்றும் கலாச்சார நடைமுறைகளின் சான்றுகள் கண்டறியப் பட்டுள்ளன.
ஒன்று மற்றும் இரண்டு மேடுகளுக்கு இடையே 3.5 முதல் 4 அடி வரை மதிப்பிடப்பட்ட ஆழங்களுடன் கூடிய நீர்ச் சேமிப்புப் பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன.
அந்த இடத்திலிருந்து சுமார் 300 மீட்டர் தொலைவில் சௌதாங் நதி (திரிஷாவதி நதி என்றும் அழைக்கப்படுகிறது) என அடையாளம் காணப்பட்ட வறண்ட ஆற்றுப்படுகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பகுதியில் வாழ்ந்த மக்கள் தங்கள் நீர் சேவைக்காக இந்த நதியை சார்ந்திருந்து உள்ளனர் என்பதோடு அவர்கள் நீடித்தப் பயன்பாட்டிற்காக நீர்த்தேக்கங்கள் மற்றும் கால்வாய்களில் தண்ணீரை சேமித்து வைத்திருந்தனர்.
865 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட ராக்கிகர்ஹி, மிகப்பெரிய ஹரப்பா காலத் தளம் ஆகும்.
அதன் வரலாறு ஆனது, ஆரம்ப கால ஹரப்பா காலம் முதல் கடைநிலை ஹரப்பா காலம் வரையில் பல நிலைகளில் கி.மு. 5000 முதல் 2000 வரை பரவியுள்ளது.