7.5% பொருளாதார வளர்ச்சி சாத்தியமில்லை: பொருளாதார ஆய்வறிக்கையில் தகவல்
August 12 , 2017 2792 days 1089 0
நிகழாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் எதிர்பார்த்த அளவு (5 சதவீதம்) உயர வாய்ப்பு இல்லை என்று பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விவசாயக் கடன் தள்ளுபடியும், அந்நிய செலாவணிக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பில் ஏற்பட்ட சரிவுமே அதற்கு காரணம் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையால் நாட்டின் பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்படும் என்று பிரதமர் கருத்து தெரிவித்து வந்த நிலையில், அதற்கு மாறான கருத்துகள் ஆய்வறிக்கையில் இடம் பெற்றிருப்பது விமர்சனங்களுக்கு இடமளித்துள்ளது.
நிகழாண்டுக்கான முதலாவது பொருளாதார ஆய்வறிக்கை கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்டது. அதில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 5 சதவீதத்திலிருந்து 7.5 சதவீதம் வரை அதிகரிக்கக் கூடும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், அதற்கு அடுத்து வந்த மாதங்களில் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மத்திய அரசு முன்னெடுத்தது. குறிப்பாக, சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு (ஜிஎஸ்டி) நடைமுறை அமல்படுத்தப்பட்டது. அவற்றின் தாக்கங்கள் நாட்டின் நிதி நிலையில் பிரதிபலிக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்தச் சூழலில் அதனை ஊர்ஜிதப்படுத்தும் வகையிலான அம்சங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ள இரண்டாவது பொருளாதார அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.
தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன் அவர்களின் தலைமையில் உருவாக்கப்பட்ட பொருளாதார ஆய்வு அறிக்கையை மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.