TNPSC Thervupettagam

9-வது “பிரிக்ஸ்” மாநாடு – ஜியாமென், சீனா

September 5 , 2017 2491 days 840 0
  • சீனாவின் ஜியாமென் நகரில் பிரிக்ஸ் அமைப்பின் 9-ஆவது மாநாடு செப்டம்பர் 3,4,5 தேதிகளில் நடைபெற்றது. 2011 ஆண்டிற்கு பிறகு சீனா இம்மாநாட்டை இரண்டாவது முறையாக நடத்தியுள்ளது.
  • இந்த மாநாட்டில், பிரேசில் அதிபர் மிச்செல் திமர், ரஷிய அதிபர் விளாதிமிர் புதின், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜீ ஜின்பிங், தென்னாப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஜூமா ஆகியோர் கலந்து கொண்டு பல்வேறு விவகாரங்கள் குறித்தும் ஆலோசனை நடத்தினர்.
  • மாநாட்டின் நிறைவில், "ஜியாமென் பிரகடனம்” என்ற பெயரில் பிரகடனம் வெளியிடப்பட்டது.
  • பிரிக்ஸ் மாநாட்டில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, பயங்கரவாதப் பிரச்னையை தீவிரமாக எழுப்பினார். இதற்கு பிற நாடுகளின் தலைவர்களும் ஆதரவு தெரிவித்தனர். பயங்கரவாத அச்சுறுத்தலுக்கு எதிரான நடவடிக்கையில் இணைந்து செயல்படத் தயாராக இருப்பதாகவும் அவர்கள் விருப்பம் தெரிவித்தனர். இதன் பயனாகவே, லஷ்கர்-ஏ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகம்மது ஆகிய 2 பயங்கரவாத அமைப்புகளின் பெயர்களும் ஜியாமென் பிரகடனத்தில் சேர்க்கப்பட்டன.
  • பிரிக்ஸ் அமைப்பின் முந்தைய மாநாடு, கோவாவில் நடைபெற்றபோது வெளியிடப்பட்ட பிரகடனத்தில், பாகிஸ்தானில் இருந்து செயல்படும் பயங்கரவாத அமைப்புகளின் பெயர்களைச் சேர்ப்பதற்கு இந்தியா தீவிர முயற்சிகள் எடுத்தது. ஆனால், அதற்கு சீனா முட்டுக்கட்டை போட்டதால், இந்தியாவின் முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை. எனினும், இந்த முறை அந்த 2 பயங்கரவாத அமைப்புகளின் பெயர்களும் சேர்க்கப்பட்டுள்ளன. இது பாகிஸ்தானில் இருந்து செயல்படும் பயங்கரவாத அமைப்புகள் மீதான சீனாவின் கண்ணோட்டத்தில் ஏற்பட்டுள்ள மாற்றத்தின் அடையாளமாகவே பார்க்கப்படுகிறது.
  • 2017 பிரிக்ஸ் மாநாட்டின் மையக்கரு: பிரகாசமான எதிர்காலத்திற்கான வலுவான கூட்டணி (Stronger Partnership for a Brighter Future)
  • அடுத்த பிரிக்ஸ் மாநாடு தென் ஆப்பிரிக்காவில் 2018 ஆம் ஆண்டில் நடைபெறவுள்ளது.
ஜியாமென் பிரகடனத்தின் முக்கிய அம்சங்கள்:
  • பிரிக்ஸ் அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளில் ஊழலுக்கு எதிராக தீவிர நடவடிக்கைகள் எடுக்க உறுதி.
  • சர்வதேச சட்ட விதிகளுக்கு உட்பட்டு, உலக அமைதி மற்றும் பாதுகாப்பிற்குத் தேவையான பணிகளில் கூட்டாக ஈடுபடுதல்.
  • குறிப்பிட்ட நாடுகளுக்கு எதிராக தன்னிச்சையான ராணுவ தலையீடு, பொருளாதாரத் தடை உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு கண்டனம்.
  • உலகின் பல்வேறு பகுதிகளில் நிகழ்த்தப்பட்டுள்ள பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு வேதனை தெரிவிப்பதுடன், அனைத்து வகையிலான பயங்கரவாதம், செயல்திட்டங்களுக்கு கண்டனம்.
  • பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி கிடைக்காமல் தடுப்பது, தங்களது மண்ணில் பயங்கரவாத அமைப்புகள் செயல்படாமல் தடுப்பது ஆகியவை அனைத்து நாடுகளின் பொறுப்பாகும்.
  • பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைக்கு சர்வதேச அளவில் நேர்மையான கூட்டணியை ஏற்படுத்துவது மற்றும் இதுதொடர்பான ஐ.நா. சபையின் நடவடிக்கையை ஆதரித்தல்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்