- மத்திய உள்துறை அமைச்சகமானது (Union Home Ministry) மேகாலயா மாநிலத்திலிருந்து ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை {Armed Forces (Special Powers) Act -AFSPA} நீக்கியுள்ளது. மேலும் அருணாச்சலப் பிரதேசத்தில் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் அமல்பாட்டிலுள்ள காவல் நிலைய வரம்பெல்லைகளை 16 காவல் நிலையங்களிலிருந்து 8 ஆக குறைத்துள்ளது.
- இருப்பினும் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டமானது மியான்மர் நாட்டுடன் எல்லையைக் கொண்டுள்ள திரப், லாங்டிங், சங்லாங் ஆகிய 3 கிழக்கு அருணாச்சலப் பிரதேச மாவட்டங்களில் மேலும் 6 மாதத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
- அஸ்ஸாம் மாநிலத்தினோடு எல்லையைக் கொண்டுள்ள அருணாச்சலப் பிரதேசத்தினுடைய ஏழு பிற மாவட்டங்களின் எட்டு காவல் நிலையங்களின் கீழுள்ள குறிப்பிட்ட பகுதிகளிலும் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் 6 மாதத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
- 2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் அருணாச்சலப் பிரதேச மாநிலத்தின் இம்மூன்று மாவட்டங்களிலும் அமலில் உள்ளது.
- 2015 ஆம் ஆண்டு திரிபுரா மாவட்டத்தில் இருந்து ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் திரும்பி பெறப்பட்டது.
- அஸ்ஸாம் மற்றும் நாகலாந்து மாநிலங்கள் முழுவதும் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் அமலில் உள்ளது.
- மணிப்பூர் மாநிலத்தில் இம்பாலின் ஏழு சட்டமன்றத் தொதிகள் தவிர பிற பகுதிகள் முழுவதும் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் அமலில் உள்ளது.
- அஸ்ஸாம் உடனான எல்லையில் 20 கிலோ மீட்டர் அளவிலான பரப்புக்கு மேகாலயாவில் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் அமலில் உள்ளது.
- அஸ்ஸாம் மற்றும் மணிப்பூர் மாநில அரசுகளானது தற்போது தங்கள் மாநிலத்தில் உள்ள ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை அமலில் கொண்டிருக்க அல்லது நீக்க அதிகாரத்தை கொண்டுள்ளன.
AFSPA
- மத்திய உள்துறை அமைச்சகத்தால் “தொந்தரவுக்குட்பட்ட பகுதி” (disturbed area) என்று அறிவிக்கப்படும் பகுதிகளில், கிளர்ச்சியாளர்களால் பயன்படுத்தப்பட சாத்தியப்படக்கூடும் என்ற அடிப்படையில் கண்டறியப்படும் எந்த ஒரு சொத்துகளை அழிக்கவும், சந்தேகிக்கப்படும் எவரது வீட்டினையும் முன்னறிவிப்பாணை ஏதும் இன்றி சோதனை செய்யவும், அவர்களை கைது செய்யவும், மேலும் அவர்களை கொன்றிடவும் மாநில மற்றும் மத்திய காவற் படைகளுக்கும், ஆயுத இராணுவப் படைகளுக்கும் அதிகாரமளிக்கும் சட்டமே 1958-இல் ஏற்படுத்தப்பட்ட ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டமாகும்.
தொந்தரவுக்குட்பட்ட பகுதிகள்
- மாநிலத்தின் வெவ்வெறு மத, இன, மொழியிய, பிராந்திய, சாதிய அல்லது சமுதாய குழுக்களிடையே மோதல்களும் அல்லது வன்முறை வேறுபாடுகளும் தோன்றிடின் அப்பகுதியானது தொந்தரவுக்குள்ளான பகுதியாக மாநில அல்லது மத்திய அரசால் கருதப்படும்.
எப்படி தொந்தரவுக்குட்பட்ட பகுதிகள் என அறிவிக்கப்படுகின்றன
- குறிப்பிட்ட அல்லது முழு பகுதிகளையும் தொந்தரவுக்குள்ளான பகுதியாக அறிவிக்க, AFSPA சட்டத்தின் பிரிவு (3)-ன் கீழ் சம்பந்தப்பட்ட மாநிலத்தின் அல்லது யூனியன் பிரதேசத்தின் ஆளுநரால் இந்திய அரசிதழில் (Gazette of India) வெளியிடுவதற்காக வழங்கப்படும் அறிவிப்பாணையை தொடர்ந்து, மத்திய அரசு குடிமை உதவிகளுக்காக (Civilian Aid) ஆயுதப் படைகளை அக்குறிப்பிட்ட பகுதிகளுக்கு அனுப்பும்.
- ஒருமுறை ஒரு குறிப்பிட்ட பகுதி தொந்தரவுக்குள்ளான பகுதியாக அறிவிக்கப்பட்டால், தொந்தரவுக்குள்ளான பகுதிகள் (சிறப்பு நீதிமன்றங்கள்) சட்டம் 1976-ன் கீழ் [Disturbed Area (Special Court) Act-1976] குறைந்தபட்சம் மூன்று மாதத்திற்கு இதுவரை நடப்பில் உள்ள நிலைமை (Status Quo) அங்கு பேணப்பட வேண்டும்.