பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தால் (DRDO) தயாரிக்கப்பட்ட பீரங்கி எதிர்ப்பு வழிகாட்டு ஏவுகணையான (Anti-tank Guided Missile - ATGM) நாக் (Nag) ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.
இராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்சல்மர் மாவட்டத்தில் உள்ள பொக்ரான் சோதனை வரம்பிலிருந்து வெவ்வேறு தூர வரம்பில் அமைக்கப்பட்ட இரு பீரங்கிகளுக்கு எதிராக நாக் ஏவுகணை ஏவப்பட்டு வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது.
ஒருங்கிணைக்கப்பட்ட வழிகாட்டு ஏவுகணைகள் மேம்பாட்டு திட்டத்தின் (IGMDP- Integrated Guided Missile Development Programme) கீழ் DRDO-வினால் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் 5 ஏவுகணைகளுள் நாக் ஏவுகணையும் ஒன்றாகும்.
இத்திட்டத்தின் கீழ் தயாரிக்கப்படும் பிற 4 ஏவுகணைகளாவன.
திரிசூல்
ஆகாஷ்
பிரித்வி
அக்னி
நாக் ஏவுகணையைப் பற்றி
மூன்றாம் தலைமுறை பீரங்கி எதிர்ப்பு வழிகாட்டு ஏவுகணையான நாக் ஏவுகணை “Fire and Forget” எனும் கோட்பாட்டின்படி செயல்படுகிறது.
ஒருங்கிணைந்த வான்பயண மின்னணுவியல் (Integrated Avionics) சாதனங்களோடு மிகவும் அதிநவீன இமேஜிங் அகச்சிவப்பு ரேடார் தேடல் கருவியும் (IRR - Imaging Infrared Radar Seeker) இந்த ஏவுகணையில் பொருத்தப்பட்டுள்ளது.
உலக அளவில் ஒரு சில நாடுகள் மட்டுமே இத்தகு தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
ஹெலிகாப்டர் மூலம் ஏவத்தகு நாக் ஏவுகணை வடிவமைப்புப் பதிவானது ஹெலினா (HELINA) என்றழைக்கப்படுகிறது.
இதன் ஆங்கில விரிவாக்கம் Helicopter - launched NAG என்பதாகும்.
இந்த வகை நாக் ஏவுகணையை இந்தியாவின் தாக்குதல் ஹெலிகாப்டர்களான HAL ருத்ரா மற்றும் துருவ் நவீன இலகுரக ஹெலிகாப்டர்கள் மூலம் ஏவலாம்.