இந்திய கணினி அவசரகால மீட்பு நிறுவனத்தின் (Indian Computer Emergency Response Team) சமீபத்திய அறிக்கையின் படி இந்திய அலுவலக இணைய தளங்களில் அதிகப்படியான இணைய தாக்குதல்கள் சீனா, அமெரிக்கா மற்றும் ரஷ்யாவில் இருந்து நடத்தப்படுகின்றன.
மொத்த இணைய தாக்குதல்களில் சீனாவானது 35% என்ற மிகப்பெரிய அளவில் இந்திய அதிகாரப்பூர்வ இணையதளங்கள் மீது தாக்குதல்களில் ஈடுபட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அமெரிக்கா (17%), ரஷ்யா (15%), பாகிஸ்தான் (9%), கனடா (7%) ஆகியன உள்ளன.
இந்த அறிக்கையானது தேசிய பாதுகாப்பு சபையின் செயலகத்திற்கும் (National Security Council Secretariat) பிற பாதுகாப்பு நிறுவனங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
CERT-In ஆனது மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் தகவல் தொழில்நுட்ப துறையின் கீழ் செயல்படும் தகவல் தொழில்நுட்ப (இணையம்) பாதுகாப்பிற்கான முதன்மை நிறுவனமாகும்.
2004ல் நிறுவப்பட்ட இது அழிவு மற்றும் ஊடுருவு நடவடிக்கைகளுக்கு எதிராக இந்தியாவின் இணையவெளி மற்றும் மென்பொருள் உட்கட்டமைப்பைப் பாதுகாக்கிறது.