COVID-19 நோய்க்கான தடுப்பூசியை மதிப்பிடும் முதலாவது மனிதப் பரிசோதனையை அமெரிக்கா தொடங்கியுள்ளது.
இந்தத் தடுப்பூசியானது மாடர்னா என்ற தனியார் நிறுவனத்தினால் உருவாக்கப் பட்டுள்ளது.
இந்தச் சோதனைக் கட்டத்தின் போது, இந்தத் தடுப்பூசிகள் பாதுகாப்பானதா என்பதையும் இவை COVID - 19ஐத் தடுக்க நோய் எதிர்ப்புச் சக்தியை உருவாக்குவதற்காக மனிதர்களின் நோயெதிர்ப்பைத் தூண்டுகின்றனவா என்பதையும் இந்த சோதனை ஆய்வு செய்ய இருக்கின்றது.
நானோ கொழுப்பு (லிப்பிட்) துகள்களில் பதிக்கப்பட்ட ஆர்என்ஏவின் நீட்சியிலிருந்து இந்தத் தடுப்பூசியானது தொகுக்கப் பட்டுள்ளது.
உலகளாவிய மருத்துவப் பரிசோதனைகளில் இந்தியாவின் பங்கு 2.7% மட்டுமேயாகும்.
அதேசமயம், மருத்துவப் பரிசோதனைகளில் அமெரிக்கா 47% பங்களிப்பையும் அதற்கு அடுத்து ஐரோப்பிய ஒன்றியம் 18% பங்களிப்பையும் ஜப்பான் 11% பங்களிப்பையும் கொண்டுள்ளன.
இந்த நிலைமையை மேம்படுத்த, உலக சுகாதார அமைப்பின் ICTRP போன்ற தளங்களில் இந்தியா தீவிரமாகப் பங்கேற்க வேண்டும்.
உலக சுகாதார அமைப்பின் சர்வதேச மருத்துவப் பரிசோதனைப் பதிவுத் தளம் (International Clinical Trials Registry Platform - ICTRP) என்பது சுகாதாரப் பரிசோதனைகளில் ஈடுபடுபவர்களுக்கு ஆராய்ச்சியின் முழுமையான பார்வையானது அணுகக் கூடியதாக உள்ளதா என்பதை உறுதி செய்யும் நோக்கமுடைய ஒரு திட்டமாகும்.