அஹமதாபாத்தில் உள்ள இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகத்தைச் (Physical Research Laboratory-PRL) சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் சூரியன் போலான ஓர் நட்சத்திரத்தைச் சுற்றி வருகின்ற தொலைதூரக் கோள் ஒன்றை முதன் முறையாகக் கண்டறிந்துள்ளனர்.
இந்த கோள் மற்றும் நட்சத்திரம் ஆகிய இரண்டிற்கும் சேர்த்து EPIC எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இந்த EPIC கோளானது பூமியைக் காட்டிலும் ஆறு மடங்கு பெரியதானதாகும். மேலும் பூமியின் நிறையைக் காட்டிலும் 27 மடங்கு நிறையுடையதாகும். மேலும் பூமியிலிருந்து 600 ஒளி ஆண்டுகள் தொலைவில் தன்னுடைய நட்சத்திரத்தை சுற்றி வருகின்றது.
சனி கோளை ஒப்பிடுகையில் EPIC கோளானது மிகவும் சிறிய கோளாகும். ஆனால் நெப்டியூன் கோளைக் காட்டிலும் பெரிய கோளாகும்.
இதன் 60 சதவீத நிறையானது பனி, சிலிக்கேட்டுகள் மற்றும் இரும்பு போன்ற கனத் தனிமக் கூறுகளினால் உருவாக்கப்பட்டதாகும்.
இந்தக் கோளானது வசிப்பதற்கு சாத்தியமற்ற ஒன்றாகும். ஏனெனில் இதன் உயர் புறப்பரப்பு வெப்பநிலை 600° செல்சியஸாகும்.
EPIC கோளானது சூரியன் போலான ஓர் நட்சத்திரத்தை வெகு அண்மையில் சுற்றிவரும் போது கண்டுபிடிக்கப்பட்டது. ஒவ்வொரு5 நாளிற்கு ஒருமுறை இக்கோள் தன் நட்சத்திரத்தைச் சுற்றி வருகின்றது.
இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகத்தின் இக்கண்டுபிடிப்பிற்கு மத்திய விண்வெளித் துறை வெகுவாக ஆதரவளித்தது. ISRO அமைப்பானது இத்துறையின் முக்கியப் பிரிவாகும்.
குறிப்பாக, இக்கண்டுபிடிப்பானது இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகத்தால், வடிவமைக்கப்பட்ட PARAS எனும் நிறமாலை வரைவியின் (spectrograph) பயன்பாட்டின் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
PARAS நிறமாலை வரைவியானது புதிய கோள்களின் நிறையை அளவிடவும், அவற்றை உறுதிப்படுத்தவும் பயன்படுகின்றது.
PARAS நிறமாலை வரைவியானது நட்சத்திரங்களை சுற்றிவருகின்ற கோள்களின் நிறையை அளவிட வல்ல நாட்டின் முதல் வகையான நிறமாலை வரைவியாகும்.
இந்த நிறமாலை வரைவியானது ராஜஸ்தான் மாநிலத்தின் மவுண்ட் அபுவில் உள்ள இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகத்தின் குருஷிகார் நோக்ககத்தில் (Gurushikhar Observatory) உள்ள2 மீட்டர் தொலைநோக்கியுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.