நெரிசலை குறைத்து போக்குவரத்தை விரைவுப் படுத்துவதற்காகவும், குறிப்பாக கட்டணச் சாவடிகளில் போக்குவரத்தை விரைவுப் படுத்துவதற்காகவும், டிசம்பர் 1க்கு பிறகு சந்தையிடப்படும் அனைத்து வாகனங்களிலும் FASTags ஐ கட்டாயமாகப் பொருத்த அனைத்து உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கு மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
டிசம்பர் 1, 2017 அன்று அல்லது அதன் பிறகு விற்பனை செய்யப்படும் வாகனங்களில் FASTags பொருத்துதலை கட்டாயமாக்க மத்திய மோட்டார் வாகன விதிகள் 1989-ல் திருத்தங்கள் அண்மையில் கொண்டு வரப்பட்டன.
FASTags என்பது கட்டணச் சாவடிகளில் நேரடியாக கட்டணம் செலுத்த, கட்டணத் தொகைகள் முன் செலுத்தப்பட்ட கணக்குகளோடு (Prepaid Account) இணைக்கப்பட்ட ரேடியோ அதிர்வெண் அடையாளப்படுத்தும் தொழிற்நுட்பத்தை (RFID – Radio Frequence Identification) பயன்படுத்தும் ஓர் கட்டண வசூலிப்புச் சாதனமாகும்.
இவை வாகனங்களின் கண்ணாடிப் பகுதிகளில் பொருத்தப்படும். இதன் மூலம் தானியங்கு முறையில் சாவடிக் கட்டணம் செலுத்தப்படுவதால் சுங்கச் சாவடி வழியே வண்டிகள் நிற்காமல் பயணிக்கலாம்.
FASTags ஐ வாங்கவும், மீள் நிரப்பம் (Recharage) செய்யவும், பொது வாடிக்கையாளர்களுக்கு “My FASTags” எனும் வணிகச் செயலியும், “FASTags Partner” எனும் வணிகர்களுக்கான செயலியும் தொடங்கப்பட்டுள்ளன.