இஸ்ரோ தனது சமீபத்திய தகவல் தொடர்பு செயற்கைக் கோளான GSAT 29 ஐ வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. இது GSLV - மார்க் III D2 (GSLV - MK III D2) செலுத்து வாகனத்தால் புவியிணக்க சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.
இது ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து ஏவப்பட்டது.
GSLV MK III D2 ஆனது இந்தியாவின் 5ம் தலைமுறை கனரக உந்து வாகனமாகும். இதன்வாயிலாக 3423 கிலோ எடை கொண்ட GSAT 29 செயற்கைக் கோளை செலுத்தியதன் மூலம் மிக அதிக எடை கொண்ட செயற்கைக் கோளை சுமந்து சென்ற முதல் இந்திய செலுத்து வாகனமாக இது உருவெடுத்துள்ளது.
இந்த GSLV MK III ஆனது 2022 ஆம் ஆண்டில் முன்மொழியப்பட்டுள்ள இந்தியாவின் முதல் மனித விண்வெளித் திட்டம் மற்றும் 2019ம் ஆண்டு ஜனவரியில் செலுத்தப்பட உள்ள சந்திரயான் – 2 ஆகியவற்றுக்கான ஏவு வாகனமாக வடிவமைக்கப்பட்டது ஆகும்.
இது ஜம்மு & காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் உள்ள தொலை தூர இடங்களுக்கு தகவல் தொடர்பு சேவைகளை வழங்கக் கூடிய KA மற்றும் KU பேண்ட் டிரான்ஸ்பாண்டர்களை சுமந்து சென்று இருக்கின்றது .