ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) நிறுவனமானது, போர் விமானங்கள் ஒருங்கிணைப்பு அமைப்பு (CATS) - Warrior என்ற முழு அளவிலான சோதனை எஞ்சின் தரை வழி ஓட்டச் சோதனையினை வெற்றிகரமாக நடத்தியுள்ளது.
CATS-Warrior என்பது ஒரு ரேடாருக்குப் புலப்படாத வகையிலான ஒரு ஆளில்லா போர் பயன்பாட்டு விமானம் (UCAV) ஆகும் என்பதோடு இது ஒரு loyal wingman எனக் கூறப் படுகின்ற, மனிதர்கள் கொண்ட போர் விமானங்களுடன் இணைந்து செயல்படும் ஒரு விமானமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இது திறன்மிகு வான்வெளி எதிர்ப்பு ஆயுதங்கள் (SAAWs) மற்றும் அடுத்த தலைமுறை நுட்பத்திலான இலக்குகளை மிகவும் நெருக்கமான தொலைவில் தாக்கி அழிக்கும் எறிகணைகள் (NG CCMs) ஆகியவற்றை சுமந்து செல்லக் கூடியது.
CATS-Hunter என்பது எதிரி நாட்டுப் பிரதேசத்திற்குள் மிக அதிக தொலைவில் ஊடுருவி இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கும் திறன் கொண்ட வான்வழியாக ஏவக் கூடிய குறைந்த கண்காணிப்பு அவசியம் கொண்ட சீர்வேக எறிகணை ஆகும்.
CATS-Infinity வளிமண்டல செயற்கைக்கோள் என்பது சுமார் 70,000 அடி உயரத்தில் நன்கு செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு அதி உயர, சூரிய சக்தியில் இயங்கும் வளி மண்டலச் செயற்கைக்கோள் ஆகும்.
90 நாட்கள் நீடித்து உழைக்கும் திறன் கொண்ட இது செயற்கைக்கோள்கள் மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்களுக்கு இடையிலான கண்காணிப்பு இடைவெளியைக் குறைக்கிறது.