உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் கடலோர ரோந்துக் கப்பலான ICGS விக்ரம் சென்னையின் எண்ணூருக்கு அருகே உள்ள காட்டுப்பள்ளி துறைமுகத்தில் இந்தியக் கடலோரக் காவல் படையில் இணைக்கப்பட்டுள்ளது.
33 என்ற எண் கொண்ட கொடியுடன் கூடிய இந்த ICGS விக்ரம் ரோந்துக் கப்பல் ஏப்ரல் 11 அன்று அதிகாரப்பூர்வமாகக் கடலோரக் காவல் படையில் இணைக்கப்பட்டது.
இக்கப்பலின் கட்டுமான வடிவமைப்பு மற்றும் கட்டுமான செயல்முறை ஆகியவை அமெரிக்க கப்பல் துறை மற்றும் இந்திய கப்பல் பதிவுத்துறை ஆகியவற்றிலிருந்து சான்றளிப்பைப் பெற்றுள்ளன.
இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தின் கீழ் மத்திய பாதுகாப்புத் துறையானது, மார்ச் 2015இல் லார்சன் மற்றும் டூப்ரோ நிறுவனத்துடன் ஏழு புதிய தலைமுறை கடலோர ரோந்துக் கப்பல்களைக் கட்டுவதற்கான ஒப்பந்தத்தை செய்து கொண்டது. ICGS விக்ரமானது இந்த ஏழு கப்பல்களில் முதல் வகையாகும்.
இந்த ரோந்துக் கப்பலுக்கு 1983 முதல் 2012 வரை இந்திய கடலோரக் காவல் படையில் இருந்த விக்ரம் என்ற கப்பலின் பெயரைக் கொண்டு ICGS விக்ரம் எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இதற்கு முந்தைய வகுப்பைச் சேர்ந்த கப்பல்களில் ICGS விக்ரஹா மட்டுமே தற்போது பணியில் உள்ளது.
கடலோர ரோந்துக் கப்பல்களின் செயல்பாடானது, கடலோர மற்றும் கடற்கரைப் பகுதிகளில் ரோந்து செல்லுதல், கடல்சார் மண்டலங்களில் காவல் பணியை மேற்கொள்ளுதல், கட்டுப்பாடு மற்றும் கண்காணிப்பு, கடத்தலுக்கெதிரான நடவடிக்கைகள் மற்றும் கடற்கொள்ளைகளுக்கு எதிரான நடவடிக்கைகள் ஆகியவற்றை வரையறுக்கப்பட்ட போர்க்கால செயல்பாடுகளுடன் மேற்கொள்ளுதல் ஆகும்.