புதிய தலைமுறையின் போர் விமானமாக நான்காம் தலைமுறையைச் சேர்ந்த J-20 எனும் புலப்படா போர் விமானத்தை சீனா தனது பாதுகாப்புப் படையில் சேர்த்துள்ளது.
இந்தப் பகுதியின் முதல் புலப்படா தாக்கும் விமானத்தை சீனா அறிமுகப்படுத்தியுள்ளதாலும், அமெரிக்காவிற்குப் பிறகு உலகின் இரண்டாவது நாடாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட புலப்படா போர் விமானத்தை அறிமுகப்படுத்தியுள்ளதாலும் இந்த போர் விமான அறிமுகம் உலக அரங்கில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் விடுதலை ராணுவத்தின் வான்படைப் பிரிவிற்காக சீனாவின் செங்குடு விண்வெளி நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட J-20 போர்விமானம் சீனாவின் நான்காவது தலைமுறை வகையைச் சேர்ந்த நடுத்தர மற்றும் நீண்ட தூர போர் விமானம் ஆகும்.
தற்சமயம் இவ்விமானம் ரஷ்யாவின் சாடர்ன் AL-31 ரக என்ஜின்களுடன் பொருத்தப்பட்டு இயக்கப்படுகின்றது. எதிர்காலத்தில் இதில் சீனாவின் உள்நாட்டுத் தயாரிப்பான தைஹாங் என்ஜின் பொருத்தப்படும்.
தனது முதல் பயணத்தை 2011ல் இவ்விமானம் ஆரம்பித்தது.
2016ம் ஆண்டு நவம்பர் மாதம் சீனாவின் குங்டாங் மாகாணத்தில் உள்ள ஜீஹாய் என்னும் நகரில் நடைபெற்ற 11வது வான் கண்காட்சியில் பொதுமக்களுக்கு இது அறிமுகம் செய்யப்பட்டது.