ஜவஹர்லால் நேரு வெப்பமண்டலத் தாவரவியல் பூங்கா மற்றும் ஆராய்ச்சி நிறுவனமானது (JNTBGRI - Jawaharlal Nehru Tropical Botanic Garden and Research Institute) புவி உயிரி மரபணு வரிசைப்படுத்துதல் மீதான இந்திய முன்முயற்சி (IIEBS - Indian Initiative on Earth Bio Genome Sequencing) குறித்த உயிரியல் அறிவு மற்றும் வள மையங்களில் ஒன்றாகத் தேர்வு செய்யப் பட்டுள்ளது.
நாட்டில் அறியப்பட்ட அனைத்து வகையான தாவரங்கள் மற்றும் விலங்குகளின் மரபணுத் தகவல்களை குறி விளக்கம் (decode) செய்வதற்கான ஒரு நாடு தழுவிய திட்டமாக அமைய இது திட்டமிட்டுக் கொண்டு இருக்கின்றது.
புது தில்லியில் உள்ள தேசியத் தாவர மரபணு ஆராய்ச்சி நிறுவனமானது, மொத்தம் 24 நிறுவனங்களை உள்ளடக்கிய நாடு தழுவிய இத்திட்டத்தை ஒருங்கிணைக்கும் ஒரு மையமாகும்.
இந்தத் திட்டம் புவி உயிரி மரபணுத் திட்டத்தின் ஒரு பகுதியாகும். மேலும் அது ஒரு சர்வதேச முயற்சியாகும். அது பூமியின் யூகாரியோடிக் பல்லுயிர் பெருக்கத்தின் அனைத்து மரபணுக் குறியீடுகளையும் 10 ஆண்டுகளில் வரிசைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
மரபணு வரிசைப்படுத்துதல் என்பது ஒரு உயிரினத்தின் மரபணுவின் முழுமையான டி.என்.ஏ வரிசையை ஒரே நேரத்தில் தீர்மானிக்கும் மேம்போக்கானச் செயல்முறை ஆகும்.