மத்திய அரசானது, 2005 ஆம் ஆண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிச் சட்டத்தின் (MGNREGA) கீழ், பயிற்சித் திறன் சாரா உடலுழைப்புத் தொழிலாளர்களுக்கான 2024-2025 ஆம் நிதியாண்டிற்கான திருத்தப்பட்ட புதிய ஊதிய விகிதங்களைச் சமீபத்தில் அறிவித்துள்ளது.
ஊரக மேம்பாட்டு அமைச்சகம் ஆனது 2005 ஆம் ஆண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிச் சட்டத்தின் 6(1) என்ற பிரிவின் கீழ், புதிய ஊதிய விகிதங்களை அறிவித்துள்ளது.
இந்தப் புதிய ஊதிய விகிதங்கள் ஆனது 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் 01 ஆம் தேதி முதல் தொடங்க உள்ள நிதியாண்டிலிருந்து நடைமுறைப் படுத்தப்படும்.
கோவா மாநிலத்தில் நடப்பு நிதியாண்டில் ஒரு நாளைக்கு 322 ரூபாயாக உள்ள ஊதிய விகிதமானது அதிகபட்சமாக 10.56 சதவீதம் அளவிற்கு உயர்த்தப்பட்டு, 2024-2025 ஆம் நிதியாண்டில் ஒரு நாளைக்கு 356 ரூபாயாக வழங்கப்படும்.
அதே சமயம், உத்தரப் பிரதேசம் மற்றும் உத்தரக்காண்ட் ஆகிய சில மாநிலங்களில் தற்போது ஒரு நாளைக்கு 230 ரூபாயாக உள்ள ஊதிய விகிதத்தில் குறைந்தபட்சமாக தலா 3.04 சதவீதம் உயர்த்தப்பட்டு 237 ரூபாயாக வழங்கப்படும்.
தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் (NREGS) கீழ், ஒரு நாளைக்கு 374 ரூபாய் என்ற அதிகபட்ச ஊதிய விகிதமானது ஹரியானா மாநிலத்திற்கு ஒதுக்கப் பட்டுள்ளது.
ஒரு நாளைக்கு 234 ரூபாய் என்ற மிகக் குறைந்த ஊதிய விகிதமானது, அருணாச்சலப் பிரதேசம் மற்றும் நாகாலாந்து ஆகிய மாநிலங்களுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.