குவால்காம் டெக்னாலஜிஸ் நிறுவனமானது இந்தியப் பிராந்திய செயற்கைக்கோள் வழிசெலுத்தல் அமைப்பான NavIC (இந்தியச் செயற்கைக் கோள்களின் தொகுப்பு) அமைப்பு பயன்படுத்தும் விதமாக கைபேசிச் சில்லுகளை (சிப்செட்களை) உருவாக்கி உள்ளது.
இது பற்றி
இது இந்தியப் பிராந்தியத்தில் உள்ள இந்திய நிலப்பரப்பைச் சுற்றி 1500 கி.மீ வரையிலான அமைவிடத் தகவல்களை வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு தன்னிச்சையான பிராந்திய வழிசெலுத்தல் செயற்கைக்கோள் அமைப்பு ஆகும்.
இந்தியப் பிராந்திய செயற்கைக்கோள் வழிகாட்டுதல் அமைப்பானது இரண்டு வகையான சேவைகளை வழங்குகின்றது. அவை அனைத்துப் பயனர்களுக்கும் கிடைக்கக் கூடிய நிலையான அமைவிடச் சேவைகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்டப் பயனர்களுக்கு வழங்கப்படும் கட்டுப்படுத்தப்பட்டச் சேவைகள் ஆகும்.
ஏழு செயற்கைக்கோள்களைக் கொண்ட இந்தத் தொகுப்பானது ஒரு பிராந்திய அமைப்பாகும்.
இவற்றில் மூன்று செயற்கைக் கோள்கள் இந்தியப் பெருங்கடலின் மேற்புறத்தில் புவிநிலை செயற்கைக் கோள்களாக இருக்கும். அதாவது, அவை விண்வெளியில் நிலையாக இருப்பது போலத் தோன்றும். மேலும் நான்கு செயற்கைக் கோள்கள் புவிசார் ஒத்திசைவாக இருக்கும். இவை ஒவ்வொரு நாளும் விண்வெளியில் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் தோன்றும்.