தேசிய சஃபாய் கரம்சாரிகள் (தூய்மைப் பணியாளர்கள்) ஆணையத்தின் (NCSK) பதவிக் காலத்தை மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிப்பதற்கு வேண்டி மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இது சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது.
இது நாடு முழுவதும் நிலவும் மனிதக் கழிவகற்றல் பணியாளர் முறைகளைத் தடை செய்யும் சட்டத்தின் விதிகளை அமல்படுத்துகிறது.
இது 2013 ஆம் ஆண்டு மனிதக் கழிவகற்றல் பணியாளர்கள் பணியமர்த்தப்படுவதைத் தடைசெய்தல் மற்றும் மறுவாழ்வுச் சட்டத்தின் விதிகளை செயல்படுத்தும் முகமை ஆகும்.
துப்புரவுத் தொழிலாளர்களின் மேம்பாட்டிற்கான குறிப்பிட்டத் திட்டங்களை மத்திய அரசிற்குப் பரிந்துரைக்கவும், அவர்கள் மத்தியில் நிலவும் குறிப்பிட்டக் குறைகளை விசாரிப்பதற்கும், அவர்களின் பணி நிலைமைகளை ஆய்வு செய்து கண்காணிக்கவும் NCSK முகமைக்கு அதிகாரம் உள்ளது.
1993 ஆம் ஆண்டு தேசியத் தூய்மைப் பணியாளர்கள் ஆணையச் சட்டத்தின் கீழ், 1994 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட முதல் NCSK ஆனது, இந்தச் சட்டம் 2004 ஆம் ஆண்டில் காலாவதியாகும் வரையில் ஒரு சட்டப்பூர்வ அமைப்பாகச் செயல்பட்டு வந்தது.
அப்போதிருந்து, அதன் பதவிக் காலம் ஆனது அவ்வப்போது நீட்டிக்கப்பட்டு, சமூக நீதி அமைச்சகத்தின் கீழான ஒரு சட்டப்பூர்வமற்ற அமைப்பாகச் செயல்பட்டு வருகிறது.